இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒவ்வொரு நாளும் காலையில் செல்பேசியை திறந்தவுடனேயே, ’இன்றைய அறிமுக ஊக்கத்தொகையாக ரூ.10,000 + 2,000 வழங்குகிறோம். அதைக் கொண்டு ஆன்லைன் ரம்மி ஆட்டத்தைத் தொடங்குங்கள். லட்சக்கணக்கில் வெல்லுங்கள்’ என்ற செய்தி வருகிறது. வீடுகளுக்குள்ளேயே அடைந்து கிடப்பதால் ஏற்பட்ட வெறுமை ஒருபுறம், ஆன்லைன் ரம்மி ஆடி லட்சக்கணக்கில் சம்பாதித்தால் அது வருமானம் இல்லாத காலத்தில் உதவியாக இருக்குமே என்ற ஆசை ஒருபுறம் என இரண்டும் சேர்த்து ஆன்லைன் ரம்மிக்கு இளைஞர்களை அடிமையாக்குகின்றன.
அறிமுக ஊக்கத்தொகையாக ஆன்லைன் ரம்மி நிறுவனம் கொடுக்கும் பணம் சில நிமிடங்களில் கரைந்து விடும். அதன்பின் அந்த இளைஞர்கள் தங்களிடம் உள்ள சிறிய அளவு சேமிப்பைக் கொண்டு ஆன்லைன் ரம்மி எனும் சூதாட்டத்தைத் தொடருவார்கள். அடுத்த சில மணி நேரங்களில் அவர்களின் சேமிப்புகள் முழுவதுமாக கரைந்து விடும். சூதாட்டங்கள் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின் போது, ஆன்லைன் ரம்மி சூதாட்டமா? என்ற வினாவே எழவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.
அதை பயன்படுத்திக்கொண்டு அனைத்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களும், ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான இளைஞர்களை நடுத்தெருவுக்கு கொண்டு வருகின்றன. ஆன்லைன் ரம்மி எனப்படும் சூதாட்டம் உடனடியாக தடுக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மிக மோசமான சமூக, பொருளாதார பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
எனவே, புதிய விதிகளை உருவாக்கியோ, ஏற்கனவே உள்ள விதிகளின்படியோ ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை உடனடியாக தடை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: சமூக வலைதளங்களில் திமுக குறித்து அவதூறு : புகார் அளித்த கட்சியினர்