இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தின்போது, ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “ஆன்லைன் ரம்மி போன்ற இணைய வழி விளையாட்டுகளில் பணம் வைத்து விளையாடுவதன் மூலம் இளைஞர்கள் தங்கள் பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்துவிடும் அவலத்தை தடுக்கும் விதமாக, தமிழக அரசு அவசர சட்டத்தை இயற்றியுள்ளது. இந்த அவசர சட்டத்தின்படி, 1930 ஆம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டச் சட்டம், சென்னை நகர காவல் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதன் மூலம், இவ்விளையாட்டில் பணம் வைத்து விளையாடுவோரை கைது செய்யவும், அதில் பயன்படுத்தப்படும் கணினி உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்யவும் முடியும். தடையை மீறி விளையாடுவோருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம், 6 மாத சிறைத்தண்டனை வழங்கவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், 2 ஆண்டு சிறையும் வழங்க முடியும். பணப்பரிமாற்றங்களை இணையவழி மூலம் செய்வதை தடுக்கவும், இவ்விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்டிக்கவும் அவசர சட்டம் வழிவகுக்கும்.
ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் சட்ட மசோதா பேரவையில் இன்று தாக்கலாகியுள்ளது. தொடர்ந்து, தமிழ்நாடு சூதாட்டம் மற்றும் காவல் திருத்த சட்ட முன்வடிவும் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
அதேப்போல், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் திருத்த சட்ட முன்வடிவை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுஅறிமுகம் செய்த பின், அச்சட்ட முன்வடிவும் பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மேலும், உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருக்கக்கூடிய மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தனி அலுவலர்களின் பதவி காலத்தை, வரும் ஜூன் மாதம் வரை நீட்டிப்பதற்கான மசோதாவை, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: ’சட்டப்பேரவையை புறக்கணித்தவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள்’