சென்னை: 21 அரசு, அரசு உதவிப்பெறும் கல்லூரியில் பிஎட் படிப்பில் சேர இணையவழி கலந்தாய்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள 21 அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2020-2021ஆம் கல்வியாண்டிற்கான இளங்கலை கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பில் சேர்வதற்கு www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும், மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது தங்களின் சான்றிதழ்களை www.tngasaedu.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை www.tngasaedu.in என்ற இணையதள முகவரியில் தெரிந்துகொள்ளலாம்.
பி.எட் படிப்பில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியியல், மனை அறிவியியல், பொருளியல், வணிகவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரியிலுள்ள 2040 இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படவுள்ளன.
மாணவர்கள் விண்ணப்பம் செய்வதற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு, தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.