காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அடுத்த தாழையம்பட்டு கிராமத்தில் உள்ள விஷ்ணு துர்க்கை, பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " திமுக ஆட்சி, இறை அன்பர்களுக்கு ஓர் பொற்கால ஆட்சியாக இருக்கிறது. திமுகவின் ஓராண்டு ஆட்சியில் 160 திருக்கோயில்களில் திருப்பணிகள் முடிவுற்று கும்பாபிஷேகங்கள் நடைபெற்றன. ஆன்மிக மணம் வீசுகின்ற ஓர் அரசாக திமுக அரசு விளங்கிக் கொண்டிருக்கின்றது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த 80 திருக்கோயில்களுக்கு 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த ஆண்டு திருப்பணி நடைபெறவுள்ளது.
குறிப்பாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரிய திருக்கோயில்களை தவிர நகர்ப்புறங்களில் உள்ள 200 சிறிய கோயில்களில், சுமார் 20 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகங்கள் நடைபெறவிருக்கிறது. தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள 88 திருக்கோயில்களில் போதிய வருமானமில்லாததால், இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் முதன்முறையாக 3 கோடி ரூபாயை அரசு நிதியாக வழங்கியுள்ளது’ என்று தெரிவித்தார்.