தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. இதுவரை 690 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். எட்டாவதாக உயிரிழந்த வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் சிஎம்சி மருத்துவமனை எதிரே பஜ்ஜி, போண்டா கடை வைத்து நடத்தி வந்தவராவார்.
இவர் வெளிநாட்டுக்கோ, டெல்லி மாநாடுக்கோ செல்லவில்லை. அதேபோல் வேலூரில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியிலும் இவர் வசிக்கவில்லை. இருப்பினும், கரோனா தொற்றால் இவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவருக்கு கடந்த மார்ச் 22ஆம் தேதி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் தீவிரமானதால் ஏப்ரல் 1ஆம் தேதி சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனளிக்காமல் நேற்று உயிரிழந்துள்ளார். நேற்று மாலைதான் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு வந்துள்ளது. அதில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.
சுகாதாரத் துறை அளித்த வழிமுறைகளின்படியே இவரின் உடல் அடக்கம் செய்யப்படும் என மாவட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இவர் வசித்த பகுதியைத் தனிமைப்படுத்தும் வகையில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.
இறந்தவரின் உறவினர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என வேலூர் மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் கூறியுள்ளார். அவர் எங்கெல்லாம் சென்று வந்தார், யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார் என்று காவல் துறையினரும் வருவாய் துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரின் செல்ஃபோன் அழைப்புகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனாவுக்காக கோப்பைகளை விற்று நிதி திரட்டிய 15 வயது கோல்ப் வீரர்!