சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுப்பதற்கு சிறப்பு சோதனைகள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இது பற்றி, போக்குவரத்து ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 12 மண்டல இணை மற்றும் துணைப் போக்குவரத்து ஆணையர்களின் மூலம் செயலாக்கப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
222 வாகனங்களுக்கு தணிக்கை
வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இணைந்து நவம்பர் 1ஆம் தேதி நடத்திய சோதனையில் அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் பிற குற்றங்களுக்காக, 222 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களிடம் இருந்து அபராதமாக முதல்கட்டமாக, மூன்று லட்சத்து11 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் இரண்டாம் கட்டமாக 57 ஆயிரம் ரூபாய் வரியும் வசூலிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, இணக்கக் கட்டணமாக நான்கு லட்சத்து 32 ஆயிரத்து 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. எட்டு வாகனங்கள் அதிக கட்டணம் வசூலித்தற்காகவும் வரி செலுத்தாமல் இயக்கப்பட்டதற்காகவும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது.
கட்டணமில்லா சேவை
இச்சோதனை, சிறப்பு தணிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டு வரும் நவம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என்று போக்குவரத்து துறை கூறியுள்ளது. சோதனையில், அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க, பொதுமக்கள் தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா தொலைபேசி சேவை (Toll Free – 1800 425 6151) மூலம் புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிஆர்க் படிப்பு: 1180 காலி இடங்கள்