சென்னை கோடம்பாக்கம் அசோக் அவென்யூ டைரக்டர்ஸ் காலனியில் வசிப்பவர் சற்குணம். இவர் தனது வீட்டு பத்திரத்தை வைத்து கடன் பெற தரகர் ரமேஷை என்பவரை அணுகியுள்ளார். சற்குணத்திடம் இருந்து பத்திரத்தை பெற்றுக் கொண்ட ரமேஷ் பேசிய தொகையிலிருந்து பாதி தொகையை மட்டுமே கொடுத்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த சற்குணம் ரமேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு பணியில் இருந்த காவலர் பழனி என்பவர் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவரிடம் பணத்தைப் பெற்று கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளார். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையரிடம் சற்குணம் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய சற்குணம், “ என்னுடைய வீட்டு பத்திரத்தை வைத்து பணம் பெறுவதற்கு தரகர் ரமேஷை அணுகினேன். ரூ.30 லட்சம் பெற்று தருவதாக கூறிய ரமேஷ் ஜெயச்சந்திரன் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் இருவரும் பத்திரத்தை பெற்றுக்கொண்டு ரூ.13 லட்சம் மட்டுமே என்னுடைய வங்கி கணக்கில் செலுத்தினார்கள்.
இதுகுறித்து கேட்டபோது அவர்களிடமிருந்து சரியான பதில் வராததால் பத்திரத்தைத் திரும்ப தருமாறு பணத்தை திருப்பி கொடுத்துவிட்டேன். ஆனால் பத்திரத்தை அவர்கள் திரும்ப தரவில்லை. இதனால் ஆர் 2 காவல் நிலையத்தில் அளித்தேன். அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்காததால் சைதாப்பேட்டை நீதிமன்றம் சென்று சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யுமாறு ஆணை பெற்றுவந்தேன்.
இதையடுத்து ஆர் 2 காவல் நிலைய அலுவலர் பழனியிடம் புகார் தெரிவித்தேன். அவர் என்னிடமிருந்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு கார் ஒன்றை கொண்டுவருமாறு சொன்னார். பின்னர் ரமேஷ், ஜெயச்சந்திரனை காவல் நிலையத்திற்கு அழைத்துவந்த பழனி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துவிட்டதாக் கூறி அவர்களை அனுப்பி வைத்துவிட்டார்.
இதனால் என்னுடை பத்திரத்தை பெற்றுத்தரக் கோரியும், பண மோசடி செய்த ரமேஷ், ஜெயச்சந்திரனை கைது செய்ய வலியுறுத்தியும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு துணைப் போன காவலர் பழனி மீதும் நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளேன்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க: ஈராக் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் - 34 பேர் உயிரிழப்பு!