திருவண்ணாமலை: கலசப்பாக்கத்தில் உள்ள கோவில் ஒன்றில் தங்களை அறங்காவலர்களாக நியமிக்க கோரி இந்து சமய அறநிலையத்துறைக்கு அளித்த மனுவை பரிசீலிக்கும் படி உத்தரவிடக்கோரி பச்சமுத்து உள்ளிட்ட மூன்று பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்கள்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்ததது. அப்போது, உரிய ஆவண, ஆதாரங்களுடன் மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முறைப்படி மனு அளிக்க வேண்டும் என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அறங்காவலர்கள் நியமனத்துக்கு உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனு அளிக்க மனுதாரர்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து, அரசுக்கு கோரிக்கை மனுவை பதிவுத் தபாலில் அனுப்பிவிட்டு அந்தக் கோரிக்கையை பரிசீலிக்கும் படி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது சமீபத்தில் அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, அந்தக் கோரிக்கை மனுக்களை பரிசீலிக்கும் படி உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவால், அலுவலர்களிடம் தங்களுக்கு சாதகமான உத்தரவுகளை மனுதாரர்கள் பெற்று விடுவதாகவும், இது ஊழலுக்கு சமம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அலுவலர்களின் பணிச்சுமையை கருத்தில் கொள்ளாமல் நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்களை அனுப்பும் போது, அதன்மீது குறித்த காலத்திற்குள் உத்தரவுகளை பிறப்பிக்க இயலாது என குறிப்பிட்ட நீதிபதி, கோரிக்கை மனுக்களை பரிசீலிக்கும் படி உயர் நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு பயந்து, கோரிக்கை மனுக்கள் மீது அவசரகதியில் உத்தரவு பிறப்பிக்கும் நிலைக்கு அலுவலர்கள் தள்ளப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வருமான வரி வழக்குகள்: எஸ்.ஜே. சூர்யா மனுக்கள் தள்ளுபடி