சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் பசுமை வழிச்சாலையிலுள்ள அவர்களது இல்லங்களில் அதிமுகவில் 'ஒற்றைத் தலைமை' தொடர்பாக இன்று (ஜூன்20) 7-ஆவது நாளாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
கட்சி ரீதியாக, சட்ட ரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களான அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், மாநிலங்களவை உறுப்பினர் தர்மர், வெல்லமண்டி நடராஜன், ஜேசிடி பிரபாகர், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக், திருவள்ளூர் வடக்கு மா.செயலாளர் சிறுணியம் பலராமன், பெரம்பலூர் மா.செயலாளர் ராமந்திரன், அரியலூர் மா.செயலாளர் தாமரை ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்.
இது ஒருபுறமிருக்க அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அவரது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தளவாய் சுந்தரம், இசக்கிசுப்பையா, முன்னாள் அமைச்சர் வளர்மதி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அதிமுகவில் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தான் ஆதரவு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதே போல், பொதுக்குழுவில் எந்த தீர்மானம் கொண்டு வந்தாலும் இறுதி முடிவு எடுக்கும் உரிமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கும் இருக்கிறது என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இப்படியாக அதிமுகவில் பதவி போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது
இதையும் படிங்க: தொண்டர்களை கையெடுத்து கும்பிட்ட ஓபிஎஸ்