சென்னை: ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அண்மைக் காலமாக இந்திய எல்லைக்குள் மீன்பிடித் தொழிலை மேற்கொண்டுவரும் தமிழ்நாட்டு மீனவர்களைக் கைதுசெய்து சிறையில் அடைப்பதையும்,
அவர்களின் படகுகளைச் சிறைபிடிப்பதையும் இலங்கைக் கடற்படையினர் வாடிக்கையாகக் கொண்டிருப்பது மிகுந்த கவலை அளிப்பதோடு, தமிழ்நாட்டு மீனவர்கள் ஒருவிதமான பதற்றத்துடனும், அச்ச உணர்வுடனும் தங்களுடைய மீன்பிடித் தொழிலை மேற்கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
தொடர் தாக்குதல்
2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் மூன்று முறை இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்பட்டதன் விளைவாக 68 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு, அவர்களுடைய பத்து படகுகள் சிறைப்பிடிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஜனவரி 23ஆம் தேதியன்று, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மூன்று தமிழ்நாட்டு மீனவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதுடன், அவர்களுடைய உபகரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, நாகப்பட்டினம் மாவட்டம், அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த 12 மீனவர்கள் ஜனவரி 31 தேதியன்று இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு அவர்களுடைய விசைப்படகும் பறிமுதல்செய்யப்பட்டது.
பல மீனவர்கள் சிறைப்பிடிப்பு
அன்றைய நாளில், வேறொரு படகில் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த ஒன்பது பேர் கோடியக்கரைக்கு தெற்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைப் படையினர் ஒன்பது இந்திய மீனவர்களையும், அவர்கள் வந்த விசைப்படகினையும் சிறைப்பிடித்துள்ளனர்.
இதன் தொடர்ச்சியாக, பிப்ரவரி ஏழாம் தேதியன்று தமிழ்நாட்டு மீனவர்கள், இந்தியக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கப்பலில் வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களை மீன் பிடிக்கவிடாமல் விரட்டியடித்ததோடு, மூன்று படகுகளையும், 11 மீனவர்களையும் சிறைப்பிடித்து காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமிற்கு கொண்டுசென்றனர்.
பின்னர், இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அனைவரும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டதையடுத்து, அவர்களை இந்த மாதம் 22ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்துவருகின்றனர்.
சட்ட விரோத செயல்கள்
தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இதுபோன்ற தாக்குதலை ஒரே மாதிரியான முறையில் இலங்கைக் கடற்படையினர் அல்லது சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடும் இலங்கையைச் சார்ந்தவர்கள் மேற்கொண்டுவருகின்றனர்.
தமிழ்நாட்டு மீனவர்களைத் தாக்குவது, அவர்களது உபகரணங்களைத் திருடிச் செல்வது, மீன் வலைகளைச் சேதப்படுத்துவது, அவர்கள் வைத்திருக்கும் மீன்களைத் திருடிச் செல்வது, படகுகளை சிறைப்பிடிப்பது எனப் பல நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
இது தவிர, ஏற்கனவே பிடிக்கப்பட்ட படகுகளை ஏலம் விடும் பணியையும் இலங்கை அரசு மேற்கொண்டுவருகிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையின் இதுபோன்ற நடவடிக்கைகள் கடும் கண்டனத்திற்குரியது.
மனிதநேயமற்ற செயல்
இவற்றையெல்லாம் பார்க்கும்போது, ஏதோ ஒரு நோக்கத்தை மனத்தில் வைத்துக்கொண்டு இதுபோன்ற நடவடிக்கைகளை இலங்கைக் கடற்படை எடுக்கிறதோ என்ற எண்ணம் அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.
இலங்கையில் பெய்த வரலாறு காணாத மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர் மூழ்கியுள்ளதையடுத்து, அங்குள்ள மக்கள் அதிக விலை கொடுத்து அரிசியை வாங்கும் நிலையில், இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இலங்கைக்கு மூன்று லட்சம் டன் அரிசி விநியோகம் செய்ய இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவது வேதனை அளிக்கும் செயலாகும். இந்தியா மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசுக்கு உதவிபுரியும் சூழ்நிலையில், இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கை கடற்படைத் தாக்குதல் நடத்துவது மனிதநேயமற்றச் செயல்.
எனவே, தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து தாக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், தமிழ்நாட்டு மீனவர்கள் தங்களது மீன்பிடித் தொழிலை அச்சமின்றி மேற்கொள்ளவும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஈரோடு அதிமுகவின் எஃகு கோட்டை- ஓபிஎஸ்