தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில், சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சுபின், ”தேர்வாணையத்தின் மூலம் 2014 ஆம் ஆண்டு, 7,500 செவிலியர்களும், அதனைத் தொடர்ந்து தற்போது வரை 14,000 செவிலியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் இரண்டு ஆண்டுகள் பணி முடிந்தவுடன், நிரந்தரம் செய்வதாக அறிவித்திருந்தனர்.
ஆனால் தற்போது வரை 2,000 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய 12,000 பேர் நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர். இதனை வலியுறுத்தி கட்ந்த 2017 ஆம் ஆண்டு நடத்திய போராட்டத்தின்போது, பணி நிரந்தரம் செய்கிறோம் என்று கூறி, மறுபடியும் 2,000 செவிலியர்கள் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நியமனம் செய்யப்பட்ட செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வரும் 28 ஆம் தேதி முதல் டிஎம்எஸ் வளாகத்தில் தொடர் முழக்க தர்ணா போராட்டம் நடத்த உள்ளோம். அப்போதும் அரசு இதில் முடிவு எடுக்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்.” என்றார்.
இதையும் படிங்க: இறப்பு என்னைத் தழுவும் வரை அது அன்று... ஆனால் இன்று அரசியல் ரீ என்ட்ரி 2.0!