தேசிய மக்கள் தொகை பதிவேடு கணக்கெடுப்பை தமிழ்நாட்டில் நடத்தக்கூடாது என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரிலும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழ்நாட்டில் நடத்தக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
மேலும், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது எவ்வித ஆவணங்களும் காட்ட தேவையில்லை என்று தமிழ்நாடு முதலமைச்சரும், ஆளும் அதிமுக சார்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்சூழலில் மாநில அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி ஆகியோர் இன்று டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவை குறித்து ஆலோசித்ததாகவும், தமிழ்நாட்டில் நிலவும் சூழ்நிலை குறித்தும் ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.