சென்னை: திமுக தலைவருக்கு இரவல் மூளைதான் உள்ளது, திமுக கட்சித் தலைவராக பிரசாந்த கிஷோர்தான் உள்ளார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை எழும்பூரில், தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக, வடசென்னை மாவட்டத்திற்குட்பட்ட சட்டப்பேரவை தொகுதியில் கட்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டத்திற்குப் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ஆளுநர் முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், "திமுக ஆட்சிக்காலத்திலும் துணைவேந்தர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சட்டத்திற்குட்பட்டு புகார்கள் வரும்போது அதை அரசு உதாசினம் செய்யமுடியாது. உரிய நடவடிக்கை எடுப்பது அரசின் கடமை. அதனடிப்படையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. கடிதம் தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது.
கமல்ஹாசன் யாருடைய அழுத்தத்தில் சூரப்பா தொடர்பான கருத்தை தெரிவித்தார் எனத் தெரியவில்லை. கமல் அறிவார்ந்த அரசியல்வாதியாக, சிந்திக்கத் தெரிந்த அரசியல்வாதியாக இருந்தால் அரசு புகாரை விசாரிப்பதில் என்ன தவறு எனக் கேட்டிருக்கவேண்டும். 4ஆம் தர அரசியல்வாதிக்கும் அரசியல்வாதிக்கும் வித்தியாசம் உள்ளது. அரைவேக்காடு தனமாக கமல் பேசக்கூடாது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுகவின் தலைவருக்கு இரவல் மூளைதான் உள்ளது. திமுக கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர்தான். திமுகவின் பேச்சை காதுகொடுத்து கேட்கமுடியவில்லை.
தமிழ்நாட்டில் ஆரோக்கியமான நல்ல கருத்துகளை பரிமாறும் விதமாக எதிர்கட்சிகள் இருக்கவேண்டும். தமிழ்நாட்டின் அவமானச் சின்னமாகவும், இந்தியாவின் அவமானச் சின்னமாகவும் ஆ. ராசா இருக்கிறார். ஊழல் குறித்துப் பேச ஆ.ராசவிற்கு தகுதி இல்லை" என்றார்.
இதையும் படிங்க: 'ஜெயலலிதா குறித்து பேசினால்...திமுக தலைவர்கள் குறித்து பேசுவோம்'- ஜெயக்குமார் எச்சரிக்கை!