2007ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டத்தில், அரசு மேல் நிலைப் பள்ளியில் சத்துணவுப் பணியாளராக நியமன உத்தரவு பெற்ற வரியான்காவல் கிராமத்தைச் சேர்ந்த ஆண்டாள் என்பவர், பணியில் சேரச் சென்ற போது, அந்தப் பணியிடம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒதுக்கப்பட்டது எனக் கூறி, பணியில் சேர வட்டார வளர்ச்சி அதிகாரி அனுமதி மறுத்துள்ளார்.
தனக்கு வழங்கப்பட்ட பணி நியமன ஆணையை அமல்படுத்த உத்தரவிடக் கோரி, 2007ஆம் ஆண்டு ஆண்டாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரனை நீதிபதி வி.எம். வேலுமணி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, மாவட்ட ஆட்சியர் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து, பணி நியமனம் செய்யப்பட்ட 2007-ல் 34 வயதில் இருந்த மனுதாரர், தற்போது பணிநியமனம் பெறும் வயதை தாண்டிவிட்டதால், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு பெரம்பலூர், அரியலூர் மாவட்ட ஆட்சியர்கள், ஆண்டிமடம் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோர் எட்டு வாரங்களுக்குள் 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும், இந்த இழப்பீடு தொகை வழங்கப்படுவதை அரியலூர் மாவட்ட ஆட்சியர் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.