சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் அகில இந்திய கலந்தாய்வில் மாநிலக் கல்லூரியில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் இளநிலை மருத்துப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு செப்டம்பர் 13ஆம், அக்டோபர் 14ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் தேசிய தேர்வு முகமையால் அக்டோபர் 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் 7 லட்சத்து 71 ஆயிரத்து 500 மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர தகுதிப் பெற்றுள்ளனர்.
பொது மருத்துவம் (எம்.பி.பி.எஸ்), பல் மருத்துவப் படிப்பில்(பி.டி.எஸ்) அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவர்களுக்கான கலந்தாய்வினை மருத்துவ கலந்தாய்வுக் குழு நடத்திவருகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களின் கீழ் சேர விரும்பும் மாணவர்கள் https://mcc.nic.in/UGCounselling என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம். இந்தியாவிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் 15 விழுக்காடு இடங்கள் இதன் மூலம் நிரப்பப்படும்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் மாநில அரசின் கல்லூரிகளில் எஸ்.சி பிரிவினருக்கு 15 விழுக்காடு இடங்களும், எஸ்.டி பிரிவினருக்கு 7.5 விழுக்காடு இடங்களும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 5 விழுக்காடு இடங்களும் அளிக்கப்படும். ஆனால் மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழங்களிலுள்ள இடங்களில் ஓபிசி பிரிவில் 27 விழுக்காடு, முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இடங்களும் அளிக்கப்படும். அதே நேரத்தில் மாநில அரசின் கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை.
இந்த கலந்தாய்வின் மூலம் ஜம்மு காஷ்மீர் தவிர, பிற மாநிலங்களிலுள்ள எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்பில் 15 விழுக்காடு இடங்களும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் 100 விழுக்காடு இடங்களும், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள 100 விழுக்காடு இடங்களும், ஜிப்மர் மருத்துவக் கல்லூரி (புதுச்சேரி, காரைக்கால்), அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், வர்த்தாமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி, மாநிலங்களிலுள்ள மருத்துவக் கல்லூரிகள், இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் 15 விழுக்காடு இடங்கள் நிரப்பப்படும்.
அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்வதற்கான முதல் சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்க அக்டோபர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 2ஆம் தேதி வரை பதிவு செய்து கட்டணங்களை செலுத்தலாம் எனவும், மாணவர்கள் தங்கள் தேர்வு செய்யவுள்ள கல்லூரிகளின் இடங்களை இணையதளம் மூலம் அக்டோபர் 28 முதல் நவம்பர் 2ஆம் தேதி 7 மணி வரை பதிவுசெய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு நவம்பர் 3, 4ஆம் தேதிகளில் வெளியிடப்படும். அதனைத் தொடர்ந்து நவம்பர் 5ஆம் தேதி இறுதியாக இடங்கள் அறிவிக்கப்படும். மாணவர்கள் கல்லூரிகளில் நவம்பர் 6ஆம் தேதி முதல் 12ஆம் தேதிக்குள் சேர வேண்டும்.
இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்க நவம்பர் 18ஆம் தேதி மாலை 3 மணி முதல், நவம்பர் 22ஆம் தேதி வரை கட்டணங்களை செலுத்தலாம். தொடர்ந்து நவம்பர் 25ஆம் தேதி இறுதியாக இடங்கள் அறிவிக்கப்படும். மாணவர்கள் கல்லூரிகளில் நவம்பர் 26ஆம் தேதி முதல் டிசம்பர் 2ஆம் தேதிக்குள் சேர வேண்டும்.
மாணவர்கள் டிசம்பர் 2ஆம் தேதிக்குள் சேராமல் இருந்தால், காலியாக இருக்கும் இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மாற்றம் செய்யப்படும். மேலும், சுயநிதி பல்கலைக் கழகங்கள், இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரிகள், எய்ம்ஸ், ஜிப்மர் ஆகியவற்றில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.