சென்னை: தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 2020- 21ஆம் கல்வி ஆண்டில் படித்த பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களில் ’தேர்ச்சி’ என்று மட்டுமே குறிப்பிட்டு வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடத்தப்படும் எனவும் அரசு அறிவித்திருந்தது. அதனடிப்படையில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தொடக்க கல்வித்துறை இயக்குநர் பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சிஇ, ஐசிஎஸ்இ மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனால் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வல்லுனர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜூன் 5ஆம் தேதி அறிவித்தார்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த ஆலோசனையின்படி, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படவுள்ளன. அந்த மதிப்பெண் பட்டியல் அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும். அதில் மாணவரின் பெயர் பிறந்த தேதி, தாய், தந்தை பெயர், படித்த பள்ளியின் பெயர் போன்ற அனைத்து விபரங்களும் இடம் பெற உள்ளது.
மேலும் மாணவர்களுக்கு பாடவாரியாக அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் என்ற இடத்தில் ’தேர்ச்சி’ என மட்டும் குறிப்பிட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது. ஏற்கனவே பத்தாம் வகுப்பு தேர்விற்கு மாணவர்களிடமிருந்து விவரங்கள் பெறப்பட்டுள்ளதால், அவற்றை சரிபார்த்து மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படவுள்ளது. மதிப்பெண் பட்டியலில் மாணவரின் பதிவு எண்கள் இடம்பெறும் வகையில் அச்சிடப்பட உள்ளது.
இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை பத்தாம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் பட்டியல்களை வடிவமைத்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஒப்புதல் கிடைத்தவுடன் மதிப்பெண்கள் இன்றி தேர்ச்சி என மட்டும் குறிப்பிட்டும், கரோனா தொற்று காலம் என அச்சிட்டும் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.