சென்னை: சென்னை ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்குக் குழு (2021-2023) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. பொது கணக்கு குழு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், கணக்கு குழு உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் துணை மேயர், ஆணையர் மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆய்வு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த செல்ல பெருந்தகை, "சென்னை மாநகராட்சி பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெருங்குடி குப்பை கிடங்கில் பூமிக்கு அடியில் இருக்கும் மீத்தேன் வாயு வாயிலாக தீப்பற்றி எரிந்து மிகப்பெரிய மாசு ஏற்பட்டது. போர்க்கால அடிப்படையில் மாநகராட்சி தீயை அணைத்துள்ளது. பெருங்குடி குப்பை கிடங்கு அருகில் உள்ள மக்கள் மாசடைந்த காற்றை சுவாசித்து வருகிறார்கள். அவர்களுக்கு துர்நாற்றம் வராமல் இருக்கவும், எடை மேடை உள்ள பகுதியை 400 மீட்டருக்கு அப்பால் தள்ளி போடவும், பல ஆண்டுகளாக செப்பனிடாத சாலையை சீரமைக்கவும் பரிந்துரை செய்துள்ளோம்.
கடந்த ஆட்சியில் கழிவு மேலாண்மையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஊழல் நடைபெற்றது தெரியும். சென்னையில் நடைபெறும் ஊழல்களின் தரவுகளும் உள்ளது. அம்மா உணவகத்திற்கு 1.33 கோடி ரூபாய்க்கு இயந்திரம் வாங்கியதில் தவறு இருப்பதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோதுமைக்கு பத்து ரூபாய் அதிகமாக வாங்குவதாக சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். கடந்த ஆண்டுகளில் நடந்த தவறை சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஆட்சியில் 442 கோடி ரூபாய் மதிப்பிலான 16 திறந்தவெளி இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இந்த ஆக்கிரமிப்பாளர்கள் மீதும், இதுபோன்ற தவறுகள் நடக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சிக்கு சொந்தமான ஓஎஸ்ஆர் இடங்களில், கார் பார்க்கிங் உள்ளிட்டவை அமைத்து விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டு சட்டப் பேரவையில் அறிக்கை தாக்கல் செய்வோம்.
கடந்த ஆட்சியில் மாநகராட்சியில் எந்த துறையும் சரியாக செயல்படவில்லை என மத்திய தணிக்கைக் குழு அறிக்கை அளித்துள்ளது" என தெரிவித்தார். தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொது கணக்குக் குழு ஆய்வு 8 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.