தமிழ்நாட்டில் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் இணையம் அல்லது நேரடியாக அரியர் தேர்வு நடத்துவது தொடர்பாக அட்டவணையைத் தாக்கல்செய்ய சென்னை உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பதிலளித்துள்ள தமிழ்நாடு, மாணவர்கள் நலன் கருதியே அரியர் தேர்வு ரத்துசெய்யப்பட்டது என்றும் தற்போதைய கரோனா சூழல் மாறியுள்ளதால் பல்கலைக்கழகங்கள் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்வுகளை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
அரியர் தேர்வு ரத்துசெய்யப்பட்டதை எதிர்த்து முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில் அரியர் தேர்வு ரத்துசெய்யப்பட்டது விதிமுறைகளை மீறிய செயலாகும் என்று கூறப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக மானிய குழுவும், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலும் ஏற்கனவே அரியர் தேர்வு ரத்துசெய்யப்பட்டது விதிமுறைகளுக்கு எதிரானது என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, அரியர் தேர்வு தொடர்பான தேர்வு அட்டவணையை அனைத்துப் பல்கலைக்கழகங்களும் பிப்ரவரி 4ஆம் தேதி தாக்கல்செய்ய உத்தரவிட்டுள்ளது.