சென்னை: நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். அடுத்த நாள் மாரடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக, வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டுவந்தது.
இதையடுத்து ஏப்ரல் 17ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு, அவரது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, கரோனா தடுப்பூசி செலுத்தியதால் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு சுகாதாரத் துறையும், தடுப்பூசியால் விவேக் உயிரிழக்கவில்லை என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் என்பவர், விவேக் கரோனா தடுப்பூசி செலுத்தியதால் உயிரிழந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தார். இந்தப் புகார் மனுவை இன்று தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: விவேக் பங்கேற்ற கடைசி நிகழ்ச்சி ஓடிடியில் வெளியீடு!