சென்னை: இன்றைய (ஆகஸ்ட் 28) நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பை விரிவாகக் காணலாம்.
- புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக் நினைவிடம் இன்று திறந்துவைப்பு
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் உள்ளது ஜாலியன் வாலாபாக். நாட்டின் சுதந்திரத்திற்காகத் தங்களுடைய இன்னுயிரை ஈந்தவர்களைப் போற்றும்விதமாக அப்பகுதியில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அந்த நினைவிடம் சில மாதங்களுக்கு முன்பு முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டது. அதை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி வசதி மூலம் அதிகாரப்பூர்வமாகத் திறந்துவைக்கவுள்ளார்.

- பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குன்னூர் வருகை
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி கல்லூரியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குன்னூர் வருகிறார்.

- விக்ரஹா ரோந்துக் கப்பல் சேவை தொடக்க விழா
கடல் ரோந்துக் கப்பல்கள் வரிசையில் ஏழாவதாக இந்திய கடலோரக் காவல் படை கப்பலான விக்ரஹாவை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னையில் தொடங்கிவைக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

- புதுச்சேரியில் நீண்ட வழித்தடப் பேருந்து சேவைகள் தொடக்கம்
புதுச்சேரியில் கரோனா ஊரடங்கினால் நிறுத்தப்பட்டிருந்த நீண்ட வழித்தடப் பேருந்து சேவைகள் மீண்டும் இன்றுமுதல் தொடங்கப்பட்டன.

- 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு
வளிமண்டலத்தில் ஈரப்பதத்துடன்கூடிய மேற்கு திசை காற்று வலுவடைவதன் காரணமாக இன்றுமுதல் மூன்று நாள்களுக்கு நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
