மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஸ்மார்ட் ஹாக்கத்தான் என்ற பொறியியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 11 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ச்சியாக 36 மணிநேரம் நடைபெற்ற போட்டியில், மாணவர்கள் குழுவாக தாங்கள் உருவாக்கிய புதிய கண்டுபிடிப்பை காட்சிப்படுத்தினர்.
இதில், பூவிருந்தவல்லியில் உள்ள பனிமலர் பொறியில் கல்லூரியில் இருந்து தகவல் தொழில்நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவுகளிலிருந்து 6 மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் பனிமலர் பொறியியல் மாணவர்கள் உருவாக்கிய புதிய தொழில்நுட்பம் அடங்கிய கருவி முதல் இடம் பிடித்தது.
இந்த தொழில்நுட்பம் மூலமாக, சென்னையில் உள்ள சாலைகளின் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை குறித்து செயற்கைகோள் மூலமாக போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளிக்கப்படும். பின்னர் அதை வைத்து எந்த சாலையில் சிக்னலை ஓபன் செய்யலாம் என்பதை போக்குவரத்து காவலர்கள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தே முடிவெடுக்க முடியும்.
மற்றொரு பிரிவில் அதே கல்லூரி மாணவர்கள், மின்னஞ்சல் பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட புதியமென்பொருள் கண்டுபிடிப்பு முதல் பரிசை பெற்றது. இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி போக்குவரத்து நெரிசலின் தன்மையை பொறுத்து தானியங்கி முறையில் செயல்படும் என தெரிவித்தனர்.