சென்னை: தெற்கு அந்தமான் கடல், அதை ஒட்டிய தாய்லாந்து கடற்கரையில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று (நவ. 13) காலை 8.30 மணி அளவில் உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து வடக்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்காள விரிகுடாவை ஒட்டிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நவம்பர் 15ஆம் தேதிக்குள் நிலைகொள்ள வாய்ப்புள்ளது.
அது தொடர்ந்து மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் ஆந்திர கடற்கரையை அடைய வாய்ப்புள்ளது எனச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி, நெல்லையில் மிக கனமழை
வட தமிழ்நாடு, அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி (3.6 கி.மீ. உயரம் வரை) காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக் கூடும்.
மேலும், சேலம், டெல்டா, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
நாளை, நாளை மறுநாள் நிலவரம்
நாளை (நவ. 14) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக் கூடும்.
மேலும், சேலம், நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
மேலும், நாளை மறுநாள் (நவ. 15) தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன்கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.
சென்னை நிலவரம்
நவ. 16, நவ. 17 ஆகிய நாள்களில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது (அ) மிதமான மழையும் பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): கன்னிமார் (கன்னியாகுமரி) 14, தக்கலை (கன்னியாகுமரி), சுரலாகோடு (கன்னியாகுமரி) தலா 13, சிவலோகம் (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி) தலா 12, புத்தன் அணை (கன்னியாகுமரி) 11, இரணியல் (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி) தலா 10, குழித்துறை (கன்னியாகுமரி) , சித்தார் (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 9, மயிலாடி (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி) தலா 7, சின்னக்கல்லார் (கோவை), குளச்சல் (கன்னியாகுமரி) தலா 5, சூளகிரி (கிருஷ்ணகிரி) , கன்னியாகுமரி (கன்னியாகுமரி) , ராதாபுரம் (திருநெல்வேலி) தலா 4 எனப் பதிவாகியுள்ளது.