கோடை விடுமுறைக்குப் பின்னர் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் இன்று திறக்கப்பட்டன. இந்த கல்வியாண்டில் 2, 3, 4, 5, 7, 8, 10,12 ஆம் வகுப்புக்களுக்கு புதிய பாடப்புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதற்காக 2 கோடியே 99 லட்சத்து 75 ஆயிரத்து 750 பாடப்புத்தகங்கள், நோட்டுகள் தயார் செய்யப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. இதில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு முதல் பருவத்திற்கான பாடப்புத்தகமும், 9 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு பாடத்திட்டத்தின் அடிப்படையில் புத்தகமும் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில் இன்று புதிய புத்தகங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மாணவர்களுக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து மற்ற பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் புத்தகங்களை வழங்கினர். சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை சரஸ்வதி பாடப்புத்தகங்களை வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட மாணவர்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்.
இந்தாண்டு 3,4,5,8 ஆம் வகுப்பு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அவை பள்ளிகளுக்கு வந்து சேராததால் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் புத்தகம் இல்லாமல் ஏமாற்றமடைந்தனர். அதேபோல் சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு எந்தப் பள்ளியிலும் சீருடைகள் வழங்கப்படாமல் உள்ளன.