நடப்பாண்டில் தமிழ்நாட்டிலுள்ள 39 மருத்துவக்கல்லூரியிலிருந்த ஐந்தாயிரத்து 400 இடங்களில், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான 580 இடங்கள் தவிர நான்காயிரத்து 820 இடங்களும்19 பல் மருத்துவக் கல்லூரியில் இரண்டாயிரத்து 913 இடங்களும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழுவின் மூலம் நிரப்பப்பட்டது. இதனிடையில் தேனி மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவர் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய சோதனையில் தருமபுரி மருத்துவக் கல்லூரியில் பயின்ற இர்பான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், தற்போது ஐந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு மோசடி நாளுக்குநாள் நீண்டுகொண்டு வரும் சூழலில், அரசு நடத்திய மருத்துவ மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு மூலம், கல்லூரியில் சேர்ந்த அனைத்து மாணவர்களின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.
நீட் பயிற்சி நிறுவனங்களில சோதனை: ரூ.180 கோடி கண்டுப்பிடிப்பு!
மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வின்போது மாணவரின் பெயர், தாய் தந்தை பெயர், பிறந்த தேதி, முகவரி, ஆதார் எண், புகைப்படம் போன்றவை பெறப்பட்டன. நீட் தேர்வுக்கான தேர்வுக்குக் கூட, நுழைவுச்சீட்டு புகைப்படத்துடன் தேசிய தகுதித் தேர்வு முகமையால் வெளியிடப்பட்டது.
நீட் தேர்வு மையங்களுக்கும் மாணவர்கள் செல்வதற்கு முன்னர் கடுமையாகச் சோதனை செய்த பின்னரே தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது மாணவர்களின் கைரேகை பெறப்பட்ட பின்னர், தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் பிற மாநிலங்களில் சோதனை எளிதாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
தொடரும் நீட் ஆள்மாறாட்ட புகார் - சென்னை மாணவி கைது!
நீட் தேர்வில் ஒரே மாணவரின் பெயர், தந்தை, தாய் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களுடன் மூன்று முதல் நான்கு இடங்களில் வெவ்வேறு நபர்கள் தேர்வினை எழுதியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மருத்துவக் கல்வி இயக்ககம் தேசிய தகுதித் தேர்வு முகமையிடம் மாணவர்களின் கைரேகை விவரங்களை அளிக்க வேண்டுமெனக் கடிதம் எழுதியுள்ளது.
நீட் ஆள்மாறாட்டம் வழக்கு: தரகர்களின் பெயர்கள் வெளியீடு
அதனை ஏற்றுத் தமிழ்நாட்டிலிருந்து தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்களும், பிற மாநிலங்களில் தேர்வெழுதி தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்களையும், தேசிய தகுதித் தேர்வு முகமை அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மாணவர்கள் கைரேகை விவரங்களை பெற்றபின்னரே, அதனை மின்னிலக்க முறையில் நகலெடுத்து, காவல் துறையின் கைரேகைப் பிரிவின் உதவியுடன் தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் கைரேகைகள் ஒப்பிட்டுப் பார்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகளை மருத்துவக் கல்வி இயக்ககம் விரைந்து மேற்கொண்டுவருகிறது.
நீட் முறைகேடு: இர்பான் கல்லூரியிலிருந்து நீக்கம்!
கைரேகையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மாணவரின் கைரேகையில் வேறுபாடு காணப்பட்டால் உடனடியாக காவல் துறையிடம் ஒப்படைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய, தமிழ்நாடு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் அனைவரும் கண்டறிய வாய்ப்புள்ளதாக மருத்துவக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.