சென்னை: நீட் தேர்வெழுதிய மாணவருக்கு இரண்டு வித மதிப்பெண்கள் இணையத்தில் வெளியிட்டது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வு நடந்து முடிந்த பின் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி தேசிய தேர்வு முகமை அதன் இணையதளத்தில் ஓ.எம்.ஆர். விடைத்தாள்களை வெளியிட்டது. இதில் முதலில் 700க்கு 594 மதிப்பெண்கள் பெற்றதாக காட்டிய நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி திடீரென தன் மதிப்பெண்களை 248ஆக குறைத்து ஓ.எம்.ஆர். வெளியிடப்பட்டதாக, கோயம்புத்தூரைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அம்மனுவில், 594 என்பதையே தன் நீட் மதிப்பெண் என கணக்கிட்டு, மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டுமென கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றபோது, நீதிமன்ற உத்தரவுப்படி, தேசிய தேர்வு முகமை சார்பில் மாணவரின் அசல் ஒ.எம்.ஆர் விடைத்தாள் சம்மந்தப்பட்ட மாணவரிடம் காண்பிக்கப்பட்டது.
அசல் விடைத்தாளில் அக்டோபர் 17ஆம் தேதி இணையதளத்தில் காட்டியதாக கூறப்படும் 248 மதிப்பெண்ணை மாணவர் பெற்றுள்ளதாக கூறப்பட்டிருந்தது. சந்தேகம் தீர்ந்ததாக நீதிமன்றம் ஒரு முடிவுக்கு வந்த நிலையில், சம்மந்தப்பட்ட மாணவர் தன் கூகுள் கணக்கில் இருந்து மீட்டெடுத்த தரவுகளை அடிப்படையாக கொண்டு கூடுதல் மனுவைத் தாக்கல் செய்தார்.
அத்துடன் சேர்த்து, அக்டோபர் 11, 12 ஆகிய தேதிகளில் எடுத்த ஸ்க்ரீன் ஷாட் புகைப்படங்களும் (594 மதிப்பெண் எனக் காட்டிய) மாணவர் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டது. மாணவரின் இந்த தரவுகள் சந்தேகத்தை கிளப்புவதாக தெரிவித்த நீதிபதி, அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை காட்டப்பட்ட 594 மதிப்பெண்கள், திடீரென அக்டோபர் 17ஆம் தேதி 248 ஆக குறைந்தது எப்படி என கேள்வி எழுப்பினார்.
'நீட்: அசல் ஓஎம்ஆர் தாள்களை வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்'
மின்னணு முறையிலான இதுபோன்ற விவகாரங்களில் யாரும் திருத்தம் செய்யவோ, ஊடுருவவோ முடியாது என்பதை அரிதியிட்டு சொல்ல முடியாத சூழல் நிலவுவதாக தெரிவித்த நீதிபதி, அது சாத்தியம் எனும் பட்சத்தில், இது மிகப்பெரிய ஆபத்து என்றும் உடனடி விசாரணை தேவை என்றும் தெரிவித்துள்ளார்.
ஒ.எம்.ஆர் விடைத்தாளில் திருத்தம் செய்ய முடியும் எனும் பட்சத்தில், இது ஒட்டுமொத்த தேர்வு முறையிலும் சிக்கலை ஏற்படுத்தும் எனவும், இது எதிர்கால மருத்துவர்களும் எண்ணற்றவர்களின் வாழ்வும் சம்மந்தப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டிய நீதிபதி, ஒரே மாணவருக்கு இரண்டு விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது, மதிப்பெண் எப்படி வேறுபட்டது என்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட மாணவர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு விரிவாக விசாரணை நடத்தி சீலிட்ட கவரில் அறிக்கை தாக்கல் செய்ய தேசிய தேர்வு முகமைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய நிலையில், மாணவர் முதலில் பெற்றதாக கூறும் 594 மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு அவரை மருத்துவ கவுன்சிலிங் கில் பங்கேற்க அனுமதிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்ட நீதிபதி, அவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் பட்சத்தில் அதை இறுதி செய்யக் கூடாதெனவும், அது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனவும் தெரிவித்து விசாரணையை டிசம்பர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.