தமிழ்நாட்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை நீட் தேர்வுக்கு பயிற்சியளித்து மருத்துவப் படிப்பில் சேர்க்க பள்ளிக்கல்வித்துறை, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனாலும் நீட் தேர்வினை எழுதும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களும், தனியார் கோச்சிங் சென்டரில் படிக்கும் மாணவர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளி மாணவர்களின் கனவினை தவிடுபொடியாக்கி வருகின்றனர்.
இந்தாண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட கலந்தாய்வில், அரசு பள்ளியில் படித்த மாணவர் ஒருவர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார் என தெரியவந்துள்ளது. ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் கோச்சிங் சென்டரில் பணம் கட்டி படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுத்து, அரசு ஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
ஆனாலும் பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து மருத்துவப் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சிறுபான்மைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை மூலம் எம்டி எடிகேர் என்ற நிறுவனத்தின் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பயிற்சி வகுப்பில் ஐஐடியில் பயின்றுவரும் ஆராய்ச்சி மாணவர்கள் நேரடியாக வந்து பயிற்சியளித்து வருகின்றனர். சென்னையில் நான்கு மையங்களில் தற்போது சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது.
அதே போல் சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பில், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு, திறமையான மாணவர்களுக்கு நாளை முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ராஜஸ்தானைச் சேர்ந்த ஈடூஷ் இந்தியா என்ற நிறுவனத்தின் மூலம் ஆன்லைன் வழியாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அதேபோல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பாடம் எடுக்கும் ஆசிரியர்களைக் கொண்டு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுக்கான பயிற்சியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாணவர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களின் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு ஆர்வமாக விண்ணப்பம் செய்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன