சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 18 நகரங்களில் 224 மையங்களில் இன்று நண்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையில் நடைபெறும் நீட் தேர்வினை எழுதுவதற்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 971 மாணவர்கள் விண்ணப்பித்திருக்கின்றனர்.
அவர்கள் தங்களின் தேர்வு மையங்களுக்கு காலை 11.30 மணி முதலே வந்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை தேர்வு மையத்திற்குள் கண்காணிப்பாளர்கள் ஆய்வு செய்து அனுப்பி வைக்கின்றனர். மேலும், தேர்வு மையத்திற்குள் செல்லும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் வழிகாட்டுதல் அடிப்படையில் ஆய்வு செய்து அனுப்பப்படுகின்றனர்.
அதிகளவில் மாணவிகள்
இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வை எழுத, ஒரு லட்சத்து 10ஆயிரத்து 971 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில், 40,376 மாணவர்களும், 70,594 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த ஒருவரும் விண்ணப்பித்துள்ளார். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக சென்னையில் 33 தேர்வு மையங்களில் 17,992 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
சேலத்தில் 28 தேர்வு மையங்களில் இருந்து 15,067 பேர் விண்ணப்பித்துள்ளனர். தஞ்சாவூரில் உள்ள மையத்தில் திருநங்கை ஒருவர் தேர்வினை எழுத விண்ணப்பித்துள்ளார்.
தமிழில் தேர்வு
அதேபோல் இளநிலை மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவர்களில் 7.5 விழுக்காடு என்ற முன்னுரிமையின் அடிப்படையில் சேர்வதற்காக 8,727 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
அதே நேரத்தில் தமிழ் வழியில் தேர்வினை எழுதுவதற்கு அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் 5741 பேரும், அரசு உதவிப்பெறும் பள்ளியில் படித்த மாணவர்களில் 1940 பேரும் என 7681 மாணவர்கள் தேர்வினை எழுதுவதற்கு விண்ணபித்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து 11,888 மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கின்றனர். மாணவர்கள் பல்வேறு சோதனைகளுக்கு பின்னரே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள்