சென்னை: நீலம் புரொடக்சன்ஸ் யாழி பிலிம்ஸ் தயாரித்து இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ள படம் நட்சத்திரம் நகர்கிறது. பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுகிறது. 'நட்சத்திரம் நகர்கிறது' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகர் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், நடிகை துஷாரா விஜயன், இயக்குநர் பா.இரஞ்சித், வெற்றி மாறன், வெங்கட் பிரபு, சசி, சாண்டி மாஸ்டர், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, கலைப்புலி எஸ். தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் மேடையில் பேசிய நடிகர் காளிதாஸ் ஜெயராம், ‘நான் மெட்ராஸ் படம் பார்த்து விட்டு ரஞ்சித் அவர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். இப்படத்தில் ’இனியன்’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நிறைய பசங்களுக்கு ரிலேட் ஆக இருக்கும்’ என்றார். அப்போது காதலைப் பற்றி அவரிடம் எழுப்பிய கேள்விக்கு, காதல் என்றாலே பெயின் தான் என்றார், காளிதாஸ் ஜெயராம். அப்போது சிலர் கைதட்டினர். இதையறிந்துபேசிய அவர், 'எனக்காக கை தட்டிய அந்த 3 பேருக்கு காமெடியாக நன்றியையும்' தெரிவித்தார்.
நடிகை துஷாரா விஜயன்: நிகழ்ச்சி மேடையில் பேசிய துஷாரா, ’நட்சத்திரம் நகர்கிறது படம் நான் நேசித்து நடித்த படம். மாரியம்மாவாக எனக்கு வாய்ப்பு கொடுத்தவர், இயக்குநர் பா.இரஞ்சித். இப்படத்தில் என் கதாபாத்திரத்தின் பெயர், ரெனே. தனது ஒப்பீனியனை சொல்ல தயங்காத ஒரு பெண் கதாபாத்திரம். இந்த படத்தின் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன். காதலைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. இது ஆரோக்கியமான கருத்தை முன் வைக்கும் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.
நடிகர் கலையரசன்: நிகழ்ச்சி மேடையில் பேசிய கலையரசன், ‘என் கதாபாத்திரத்தின் பெயர் அர்ஜூன். எல்லாரும் திட்டிக்கொண்டே இருக்கும் கதாபாத்திரம். ரொம்ப கஷ்டப்பட்டு தான் நடித்தேன். அனைவரும் ஆதரவு தர வேண்டும். குடும்பமாக இருந்து நடித்தோம். இரஞ்சித் சார் எடுக்கும் படம் புதுவிதமாக, காதலை கொண்டாடும் படமாக இருக்கும்’ என்று கூறினார்.
’மேலும் இரஞ்சித் சாரை காரணமில்லாமல் ரொம்பப்பிடிக்கும், நான் சினிமாவில் முயற்சி செய்வதற்கு முன் நிறைய நிறுவனங்களுக்கு வாய்ப்புக்கேட்டுச் சென்றிருக்கிறேன். அவரைச்சுற்றி இருக்கும் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்துக்கொள்பவர் பா. ரஞ்சித்’ என்றும் நடிகர் கலையரசன் கூறினார்.
இதனையடுத்து நிகழ்ச்சி மேடையில் பேசிய தயாரிப்பாளர் கே.இ.ஞானவேல் ராஜா, 'அட்டகத்தி தொடங்கி, மெட்ராஸ், அடுத்ததாக விக்ரமுடன் ஒரு படம் செய்கிறோம். நிறைய விஷயங்களை ரஞ்சித் செய்து வருகிறார். தான் செய்ய வந்த விஷயத்தை திறம்படச் செய்பவர் ரஞ்சித். ட்ரெய்லரை பார்க்கும் போதே எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. அட்டகத்தி போல இந்தப்படம் வெற்றி பெற வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, ‘கபாலியில் என்னுடன் பயணித்த போது, ஆழ்மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்தியவர், பா. இரஞ்சித். அவருக்காக எப்போதும் என்னால் முடிந்ததை செய்ய காத்திருக்கிறேன். அவருக்காக, பரியேறும் பெருமாள் படத்திற்காக தியேட்டர்கள் கிடைக்க முயற்சி செய்துள்ளேன். இது அவருக்கே தெரியாது. அடித்தட்டு மக்களின் ஒரு நகர்வாக தான் பா. இரஞ்சித் படங்கள் இருக்கும். அப்படித்தான் இந்த நட்சத்திரம் நகர்கிறது’ என்று கூறினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய பாடலாசிரியர் அறிவு, ‘நிகழ்ச்சியில் அனைவரையும் சந்திப்பது ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஞ்சித்தின் திரைப்படம் தான் என்னை பெரிய மனிதராக மாற்றியது. அவரது ஒவ்வொரு படத்தைப்பார்க்கும்போது வாழ்க்கையை மேம்படுத்தி அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று உத்வேகமாக இருந்தது. நமது உணர்வுகளை பாட்டாக எழுத வேண்டும் என்று நினைப்பவன். நான் ராப் பாடல்களாக பாடிக் கொண்டு இருக்கும் போது, மெலடி பாடலையும் பாட வாய்ப்பு கொடுத்தார்’ என்றும், பாடலைப் பாடியும் காட்டினார்.
இயக்குநர் வெற்றிமாறன்: ‘அட்டகத்தி படத்தைப் பார்க்கும் போது, ஒரு பெரிய தொடக்கமாக தெரிந்தது. அப்போது எனக்கு என்ன ஃபீல் இருந்ததோ அது தான் ட்ரெய்லரிலும் தெரிந்தது’ என்றும் படக்குழுவினரை பாராட்டிப் பேசினார், இயக்குநர் வெற்றிமாறன்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு, ‘ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. குருவை மிஞ்சிய சிஷ்யன் தான் பா. இரஞ்சித். தற்போது பார்க்கும்போது, இரஞ்சித் எவ்வளவு பேரை வளர்த்துவிட்டிருக்கிறார் என்று தெரிகிறது. நட்சத்திரம் நகர்கிறது படத்தைப்பார்க்கும்போது மிரண்டுவிட்டேன். நிச்சயமாக இன்டர்நேஷனல் ஃபிலிம் பார்த்த மாதிரி இருந்தது. தென்றல் வந்து தீண்டும் போது பாடல் இரஞ்சித் பாடும்போது அருமையாக இருந்தது’ என்று கூறினார்.
நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் பா. இரஞ்சித், ‘புரட்சித்தலைவர் அம்பேத்கருக்கு நன்றி. யாருக்கும் நான் உதவி செய்ய வேண்டும் என்று செய்யவில்லை. திறமையானவர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். வெங்கட் பிரபுவிடம் பணியாற்றியதால் தான் இது போன்ற பல விஷயங்களை செய்ய முடிந்தது. நிறைய விஷயங்களை வெங்கட் பிரபுவிடம் கற்றுக்கொண்டேன். சென்னை 28 மாதிரி வெற்றி படமாக நம்மால் எடுக்க முடியும் என்று எண்ணினேன்’ என்றார்.
இயக்குநர் சசியைப் பாராட்டிப் பேசியவர், வெற்றி மாறன் தனக்கு இன்ஸ்பிரேஷன் எனவும், கபாலி படம் எடுக்கும்போது பல விஷயங்களில் உதவி செய்து என்னைப் பாதுகாத்தார் என்றும், வெங்கட் பிரபுவுக்கு நன்றி கடன்பட்டுள்ளேன் என்றும் இயக்குநர் பா. இரஞ்சித் தெரிவித்தார்.
மேலும் 'அரசியல் பேசி விட்டுப் படத்தை எடுப்பது எளிதல்ல; என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் நடித்த அனைவரும் உறுதியாக, நன்றாக நடித்திருக்கிறார்கள்.
உண்மையை சமூகத்திற்கு பயமில்லாமல் படமாக எடுக்க வேண்டும் என்று நினைப்பேன். என் அம்மா சொன்ன வார்த்தை இன்னும் எனக்குள் கேட்டுக்கொண்டிருக்கிறது. காதலுக்கான ஒரு கருத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். சமூகத்தில் அதற்கு சரியான புரிதல் இல்லை' என்றும் கூறினார், இயக்குநர் பா.இரஞ்சித்.
இதையும் படிங்க:தன் மகன்களுடன் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா.., இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...