சென்னையின் முக்கியப்பகுதிகளில் ஒன்றான, சைதாப்பேட்டை சட்டப்பேரவைத்தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர்புர - நரிக்குறவர் காலனியில் அடிப்படை வசதிகள் இன்றி வாழும் நாடோடிப் பழங்குடியின மக்கள், போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித்தரவேண்டும், எஸ்டி சான்றிதழ் வழங்க வேண்டும் என ஈடிவி பாரத் ''தமிழ்நாடு'' ஊடகத்தில், கடந்த மாதம் ஜூலை 16ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் ஈடிவி பாரத்தின் செய்தியின் எதிரொலியாக, கோட்டூர்புரம் நரிக்குறவர் காலனி மக்களுக்கு தொட்டி அமைக்கப்பட்டு, மெட்ரோ தண்ணீர் மற்றும் மின்சார தெரு விளக்குகள் தற்போது அந்த மக்களுக்கு கிடைத்துள்ளன.
இதுதொடர்பாக, நரிக்குறவர் காலனி தலைவர் மனோகரன் கூறியதாவது, ”தற்போது அரசாங்கம் சார்பில் மெட்ரோ வாட்டர், தெருவிளக்கு உள்ளிட்டவை கிடைத்துள்ளது. இருப்பினும், எங்களுக்குப் பட்டா வழங்கினால் மிகுந்த உதவியாக இருக்கும். மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் எங்கள் பகுதிக்கு வந்து நேரில் பார்வையிட வேண்டும்'' எனக் கோரிக்கை விடுத்தார்.
மேலும் ''தற்காலிக சாதிச்சான்றிதழை, நிரந்தர சாதிச்சான்றிதழாக மாற்றித்தர வேண்டும். தற்போது எம்.பி.சி சாதிச்சான்றிதழ் மட்டுமே தற்காலிக சான்றிதழாக வழங்கப்படுகிறது. இங்கு வசிக்கும் குடும்பங்களுக்கு ST சான்றிதழ் வழங்க வேண்டும்” எனக்கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் எஸ்.பிரபா வாசுகி கூறும் போது, ”ஈடிவி பாரத் உள்ளிட்ட ஊடகங்கள் வழியாக எங்கள் மக்களின் கோரிக்கை செய்தியாக்கப்பட்டது. செய்தி வெளிவந்த சில நாட்களில், மெட்ரோ குடிநீர் மற்றும் தெருவிளக்குகள் தற்போது எங்களுக்குக் கிடைத்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த ஈடிவி பாரத் ஊடகத்திற்கு மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது இங்கு 148 குடும்பங்கள் வசிக்கின்றனர். மத்திய அரசின் 'அனைவருக்கும் கழிப்பிடம்' என்ற திட்டத்தின் கீழ் இங்கு வாழும் குடும்பங்களுக்கு தனித்தனியான கழிப்பறைகள் கட்டித்தர வழிவகை செய்ய வேண்டும். மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டும் நபர்களுக்கு அரசு மானியமாக 2,25,000/- ரூபாயை வழங்கி வருகிறது.
ஆனால், இந்த மக்களுக்கு பட்டா இல்லாத காரணத்தால் அரசு வழங்கும் அந்த திட்டத்தை இவர்களால் பயன்படுத்த முடியவில்லை. எனவே, தமிழ்நாடு அரசு இவர்களுக்கு பட்டா உடனடியாக வழங்க வேண்டும். மேலும் இங்கு பல்வேறு மாணவர்கள், கல்லூரி, உயர் கல்வி பயின்றுபட்டம் பெற்றுள்ளனர். இவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும்.
தற்போது தெரு விளக்கு அமைக்கப்பட்டதால், இரவில் பெண்கள் தைரியமாக வெளியே வர முடிகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் பட்டா, சாதிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசு விரைவில் நிறைவேற்றித்தரும் என்ற நம்பிக்கையில் இந்த மக்கள் உள்ளனர்’’ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடிப்படை வசதிகள் இன்றி வாழும் நரிக்குறவர் மக்கள் - சிறப்பு தொகுப்பு...