கடந்தாண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குறித்து அவதூறாகப் பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது தவளக்குப்பம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை தொடர்பாக கன்னியாகுமரி மாவட்டம், மணக்காவிளையில் உள்ள நாஞ்சில் சம்பத் வீட்டிற்கு கடந்த 19ஆம் தேதி புதுச்சேரி காவல் துறையினர் சென்றனர்.
இதையடுத்து, புதுச்சேரி காவல் துறையினர் தன்னை துன்புறுத்தக் கூடாது என்று உத்தரவிடக்கோரி, நாஞ்சில் சம்பத் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, கிரண்பேடி பற்றி தான் பேசியதற்காக ஓராண்டு கழித்து, காவல் துறையினர் தன்னை கைது செய்ய முயற்சிப்பதாகவும், தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக விசாரணைக்காக தன்னால் புதுச்சேரி செல்ல முடியாத நிலை உள்ளதாகவும் நாஞ்சில் சம்பத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஏப்ரல் 24ஆம் தேதி வரை நாஞ்சில் சம்பத்தை துன்புறுத்தக் கூடாது எனவும், ஆஜராவது தொடர்பாக அவருக்கு புதிய நோட்டீஸை அனுப்பவும் புதுச்சேரி காவல் துறையினருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.