சென்னை: தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையவழி வழிகாட்டும் அமர்வுகள் நேற்று (ஏப்.18) தொடங்கியது. இந்த ஆன்லைன் அமர்வுகள் மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
அந்த வகையில், ஏப்ரல் 18, 22 ஆகிய தேதிகளில் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும், ஏப்ரல் 19, 23 ஆகிய தேதிகளில் கலை, வணிகம் உள்பட பிற பிரிவு மாணவர்களுக்கும் நடக்கிறது. இந்த அமர்வுகள் மூலம் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பிற்கு பிறகு, எந்த கல்லூரிகளில் எந்த படிப்புகளை தேர்ந்தெடுப்பது, உதவித்தொகை, வேலை வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.
அதன்படி, சென்னை ராயப்பேட்டை அரசு ஹாட் போட் முஸ்லிம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்தத் திட்டத்தின் கீழ் ஆன்லைன் அமர்வு நேற்று நடந்தது. இதுகுறித்து, பள்ளி தலைமை ஆசிரியை கண்மணி கூறும்போது, "இந்த ஆன்லைன் அமர்வுகள், கரோனா ஊரடங்கு காரணமாக வகுப்புகளை தாமதமாக தொடங்கிய மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் உள்ளன. அதேபோல உயர்கல்வியில் சேர்வதற்கான அனைத்து வழிகாட்டுதல்களும் கிடைக்கின்றன" என்றார்.
இதையடுத்து பள்ளி மாணவி அஷ்ரா பானு கூறுகையில், "இந்த அமர்வுகள், நாங்கள் உயர்கல்வியை எவ்வாறு, எப்படி தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக எடுத்துரைக்கிறது. மருத்துவப்படிப்புகள், பாராமெடிக்கல் படிப்புகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படுகிறது. இது எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதேபோல வேலை வாய்ப்பு, போட்டித்தேர்வுகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன" என்றார்.
இதையும் படிங்க: ‘நான் முதல்வன்’ திட்டத்திற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு!