திருநெல்வேலி: களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளையைச் சேர்ந்தவர் விஜய்ரூபன். இவர் இதே பகுதியில் லவ் பேர்ட்ஸ் விற்பனை செய்யும் கடை நடத்திவருகிறார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களக்காடு நகராட்சி இரண்டாவது வார்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்டு 18 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியுள்ளார்.
விஜய்ரூபன் மேலபத்தை பகுதியில் வசித்துவரும் ஒரு பெண்ணை நான்கு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு அப்பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதனையறிந்த விஜய்ரூபன், அப்பெண்ணுடன் தான் எடுத்த புகைப்படத்தை களக்காடு நகர் பகுதி முழுவதிலும் கவிதையோடு சுவரொட்டியாக ஒட்டி உள்ளார். குறிப்பாக நிச்சயம் செய்த மாப்பிள்ளை வீட்டிலும் சுவரொட்டியை ஒட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்ணின் வீட்டார் களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் களக்காடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விஜய்ரூபனை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'நாம் தமிழரைப் பார்த்து அஞ்சும் திமுக!'