இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் இன்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல் ஹாசனை நேரில் சந்தித்து, குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முதலில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததற்காக தங்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
அப்போது, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் நடத்தி வரும் போராட்டத்திற்கு தமது ஆதரவு உண்டு என்றும், இந்திய இறையாண்மைக்கும், இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக தான் எப்போதும் இருப்பேனென்றும் அவர்களிடம் கமல் ஹாசன் கூறினார். போராட்டம் உறுதியாகவும், வலிமையாகவும் நடந்திட வேண்டும் என்று கூறிய கமல், அதேநேரம் எந்த வகையிலும் அதில் வன்முறை புகுந்துவிடக் கூடாது என்பதில், நாம் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கமல் ஹாசனின் இக்கருத்திற்கு ஆதரவளித்த இஸ்லாமிய அமைப்பினர் அவருக்குத் தங்கள் ஒத்துழைப்பையும் தெரிவித்தனர். இச்சந்திப்பில், ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் இறையடியார் காஜா மொய்தீன், உலமாக்கள் பேரவையின் மௌலவி நசீர் அஹமது காசிமி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவுறுத்தலின் பேரில், சென்னையில் உள்ள மலபார் முஸ்லிம் அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: கலவரத்தை தூண்டும் ஹெச்.ராஜாவை கைது செய்க - டிஜிபியிடம் புகார்!