அண்மையில் இசையமைப்பாளர் தினா பேசியது குறித்து இசையமைப்பாளர் இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.
அண்மையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இசைக்கலைஞர்கள் சங்கத் தலைவர் தினா பேசியபோது, இசைக் கலைஞர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினர் இளையராஜா உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவே, இந்த சந்திப்பு என்றவர், 'இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் அநீதி இழைத்துள்ளது.
கடந்த 45 ஆண்டு காலமாக இளையராஜா இசையோடு வாழ்ந்த ஸ்டுடியோ, பிரசாத் ஸ்டுடியோ. முதல் நாள் மாலை ரிக்கார்டிங்கை முடித்துவிட்டு வீட்டுக்குச் சென்றநிலையில், மறுநாள் காலை வழக்கம்போல ஸ்டுடியோ சென்றவரை உள்ளே நுழையவிடாமல் தடுத்துள்ளனர். இது எட்டு மாத காலங்களாக நீடித்தது. அதன்காரணமாகவே அவர் நீதிமன்ற உதவியை நாடினார்.
நீதிமன்றம் இளையராஜாவின் பொருட்களை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியது. அதற்காக இளையராஜா தரப்பில் ஆட்கள் சென்றபோது 45 ஆண்டுகாலமாக அவர் இசை அமைத்த பாடல்கள் சம்பந்தமான குறிப்புகள், நோட்ஸ்கள் சேதப்படுத்தபட்டிருந்தன.
மத்திய, மாநில அரசுகள் வழங்கிய விருதுகள் சேதப்படுத்தப்பட்டு குப்பையாக குவிக்கப்பட்டிருந்தன.
45 ஆண்டுகாலங்கள் பிரசாத் ஸ்டுடியோவில் இசைப்பணியை செய்தவரை, காலி செய்யுங்கள் என்பதை பிரசாத் நிர்வாகம் உரிய கால அவகாசம் கொடுத்து நடவடிக்கை எடுத்திருக்கலாம்' என்றார்.
ஐம்பதாண்டுகாலம் இந்திய சினிமாவுக்குத் தன் இசைப் பணியால் சர்வதேச அளவில் கௌரவத்தைப் பெற்றுத் தந்த இசைஞானி கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்; இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் தன்னை கௌரவப்படுத்தி வழங்கிய விருதுகளை திருப்பி அனுப்பும் மனநிலையில் இருப்பதாக இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் தினா இவ்விவகாரம் தொடர்பாகப் பேசியிருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்து இளையராஜா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் 'தான் சொல்லாத ஒரு தனிப்பட்ட நபரின் கருத்தை ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. அப்படி ஒரு கருத்தை தான் சொல்லவே இல்லை' என்றார்.
இதையும் படிங்க: ஆறு 5ஜி தொழில்நுட்ப தகவல் சாதனங்களை களமிறக்க ஒப்போ திட்டம்!