சென்னை: 'சாக்கடை அரசியல் செய்யும் பாஜக மாநிலத் தலைவரின் எண்ணங்களை, சல்லடைக் கண்களாகத் துளைத்து விடும் திமுக' என திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி தெரிவித்துள்ளது.
சமீபத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் செருப்பை வீச சொன்னவர் குறித்து ஆடியோ ஒன்றும் வெளியாகி மேலும் பரபரப்பானது.
தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் பிடிஆர் பழனிவேல்ராஜன் குறித்து தரம் தாழ்ந்த வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். இதற்கு தக்க பதிலையும் பழனிவேல் தியாகராஜன் அண்ணாமலைக்கு எதிராகப் பதிவு செய்திருந்தார்.
இப்படி இருக்க முரசொலி நாளிதழ், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சாக்கடை அரசியல் செய்து வருவதாக ஒரு பக்க செய்தியை வெளியிட்டுள்ளது. அதில்,
'இந்தியாவின் ஆளும் கட்சி ஒரு அரசியல் தற்குறியை தமிழ்நாட்டில் தங்கள் கட்சியின் தலைவராக்கியுள்ளது. அந்தப் பேர்வழி தான்தோன்றித் தனமாக உளறி, தமிழ்நாடு அரசியலை சாக்கடையாக்கி அதிலே குதித்து மகிழ எண்ணுகிறது.
தனது பெயருக்குப் பின்னே பொதிந்துள்ள ஐபிஎஸ். எனும் பட்டத்துக்காகவாவது மதிப்பளித்து கொஞ்சம் தெளிவோடும், விளைவுகளை எண்ணியும் வார்த்தைகளை வெளியிட வேண்டும். குருவித் தலையில் பனங்காய் போல அவர் தலையில் ஏற்றப்பட்டிருக்கும் பதவிக்காகவாவது மதிப்பளித்துப் பேச வேண்டும்.
இல.கணேசன், ஜனா.கிருஷ்ணமூர்த்தி, இராதாகிருஷ்ணன்கள் தொடங்கி கடைசியாக தமிழிசை போன்ற கண்ணியமிகு அரசியல்வாதிகள் வகித்த பதவியில், ஒரு நரகல் நடை நாயகனை அமர்த்தியதால், அந்தக் கட்சியே சாக்கடையாகி வருவதையும், அதன் முடை நாற்றம் தாங்காது, அக்கட்சியின் ஆதரவாளர்களே மூக்கைப்பிடித்துக்கொண்டு பேசுவதையும் ஊடக விவாதங்களில் காண முடிகிறது.
வலதுசாரி என்ற போர்வையில் ஊடக விவாதங்களில் பங்கேற்போர் அத்தனை பேரும் தமிழ்நாட்டு பாஜக-வின் தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு நிதியமைச்சர் குறித்து பேசியது தவறு என்பதை வெளிப்படையாகவே ஏற்றுக் கொண்டுள்ளனர்.
தங்கள் கட்சியின் மானத்தைக் காக்க சப்பைக் கட்டுக் கட்டிப் பேச வேண்டிய நிலை ஏற்பட்டதையும் ஊடக விவாதங்களை பார்த்தவர்கள் அறிவர். அது என்னவோ தெரியவில்லை, அந்த நபருக்கு ‘டாய்லெட் பேப்பர்’, செருப்பு போன்றவற்றில் ஏன் அத்தனை மோகமோ என்பதும் புரியவில்லை.
முன்பு ஒரு முறை ‘முரசொலி’ அந்த நபரின் ஐ.பி.எஸ். முகத்திரையை கிழித்தபோது, முரசொலியை ‘டாய்லட் பேப்பர்’ என வர்ணித்து, முரசொலி அவர் முகத்தில் பூசிய கரியை அந்த டாய்லெட் பேப்பரைக் கொண்டுத் துடைத்துக் கொண்டார்.
தான் முரசொலியின் வரலாறு தெரியாத மூடம் என்பதையும் வெளிப்படுத்திக் கொண்டார்.
பண்டித நேரு, பெருந்தலைவர் காமராசர், மூதறிஞர் ராஜாஜி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி., சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத், இந்திராகாந்தி அம்மையார், எம்.ஜி.ஆர். போன்ற அரசியல் ஆளுமைகளோடு அரசியல் நடத்திய முரசொலி இப்படிப்பட்ட அரைக்கால் வேக்காட்டு அரசியல் பேர்வழிகளுக்காகவும், ஒரு சில பக்கங்களை ஒதுக்கிட வேண்டி வந்து விட்டதே என்று காலக்கொடுமையை எண்ணி தனது நிலைக்காக வருந்திக்கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் தங்களைத் தேர்ந்த அரசியல்வாதிகளைப்போல போலி முகமூடி அணிந்து உலவும் இத்தகைய பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்க வேண்டியது தமிழ்நாட்டுக்கு செய்திட வேண்டிய கடமை என்பதை உணர்ந்து அந்தக் காரியத்திலும் ஈடுபட்டு வருகிறது.
பல ஆண்டு காலமாக நாம் கேள்விப்படும் ஒன்று இப்போது தனது தரத்துக்குத் தகுந்தாற்போல செருப்பு அரசியலை பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவர் தமிழ்நாட்டில் பரப்பிட வந்துள்ளார்.
இந்த செருப்பு அரசியல் பாஜகவின் திடீர் அரசியல்வாதிகளுக்கு புதிதாகத் தோன்றலாம். இன்றைய பாஜகவின் சின்னபுத்தி தலைவரின், சில்லறை அரசியல்களை திராவிட இயக்கம் தோன்றிய போதே சந்தித்திருக்கிறது.
தந்தை பெரியார் மீதும், அவரது பிரசாரத்தின்போதும் செருப்பு வீசப்பட்டது. வீசப்பட்ட செருப்பை கையிலே எடுத்துக் கொண்டு, மற்றொரு செருப்பையும் வீசுங்கள். இரண்டாக இருந்தால்தான் அது பயன்படும் என்று பேசி வீசியவனை நொந்து நோகடிக்க வைத்தவர், பெரியார்.
அவரது வழித்தோன்றல்கள் திமுகவினர். அதை நிரூபிக்கும் வகையில் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தன் கார் மீது செருப்பு வீசிய தமிழ்நாடு பா.ஜ.க. பெண்மணி குறித்து ட்விட் ஒன்றினைப் பதிவு செய்தார்.
“செருப்பை வீசிய சின்றெல்லாவே! உங்களது காலணி பத்திரமாக இருக்கிறது;வேண்டும் என்றால் பெற்றுக் கொள்ளலாம்”.– இந்த ட்விட் செருப்பை எறிந்தஅம்பை மட்டுமல்ல, எய்தவர்களையும் எள்ளி நகையாட வைக்கும் விதத்தில் அமைந்தது.
அண்ணா குறித்து அருவெறுக்கத்தக்க வாசகங்களை அன்றைய அரசியல் எதிரிகள் வெளியிட்டு சுவரொட்டி ஒட்டிய போது, அவர்கள் தரத்தை பொதுமக்கள் உணர வேண்டும் என்பதற்காக, இருட்டிலும் அந்த சுவரொட்டி தெரியும் வகையிலும், படிக்க வசதியாகவும், அந்த சுவரொட்டி முன் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை வைத்திட பணித்தவர், அண்ணா.
தரம் தாழ்ந்த விமர்சனங்களையும் தங்களது கட்சியின் ஏற்றத்துக்கு பயன்படும் படிக்கட்டுகளாக்கி வளர்ந்தது திராவிட இயக்கம். அடித்த காற்றில் பறந்து கோபுரக்கலசத்தில் ஒட்டிக்கொண்ட எச்சில் இலைகளுக்கு இந்த வரலாறுகள் தெரிந்திட நியாயமில்லை.
கழகம் ஆரம்பித்த காலத்தில் கழகத்தின் ஆற்றலாளர்களை எதிர்கொள்ளத் திராணியற்ற கழக எதிரிகள், அணுகுண்டு அய்யாவுகளையும், விபூதி வீரமுத்துகளையும் தயார்படுத்தி கழகத்தைத் தரக்குறைவாக விமர்சிக்க வைத்தனர். நல்ல நாட்டியங்களை ரசிக்க கூட்டம் இருப்பதுபோல குத்தாட்டங்களுக்கும் கூட்டம் சேருவதுண்டு. அந்த எண்ணத்தில் அருவெறுக்கத்தக்க குத்தாட்டங்கள் அரங்கேற்றப்பட்டன.
பாஜகவின் தமிழ்நாட்டுத் தலைவர் குத்தாட்டம் கூட இல்லை, “ரிக்கார்டு டான்ஸ்” என்பார்களே அதைப்போன்ற ஆபாச நடனங்களை ஆடி ஆள் சேர்க்கப் பார்க்கிறார். எதிரிகளின் குத்தாட்டம், குதியாட்டம், ரிக்கார்டு டான்ஸ் எல்லாவற்றையும் எதிர்கொண்டுதான் திமு-கழகம் பயணிக்கிறது. பாஜக-வின் தமிழ்நாட்டு தற்குறி தலைவருக்கு ஒன்றை நினைவுப் படுத்துகிறோம்.
திராவிட இயக்கம், தமிழ்நாட்டிலே அதனை அழித்தொழிக்க நினைத்த அரசியல் ஜாம்பவான் ராஜாஜியை எதிர்த்து வளர்ந்தது. திமு-கழகம் தோன்றியவுடன் அது தோன்றிய இடத்தில் புல் முளைக்கச்செய்துவிடுவேன் என்று சபதமிட்ட ராஜாஜி போன்ற தலைவர்களை எதிர்த்து நின்று, இன்று இமயமாக எழுந்து நிற்கும் இயக்கம்.
அலட்சியப்படுத்தி இந்த இயக்கத்தை அழித்துவிடலாம் என எண்ணியவர்களை அரண்டு நடுங்க வைத்த இயக்கம். மிரட்டி இந்த இயக்கத்தை தரை மட்டமாக்க நினைத்தவர்களை, மிரண்டு தனது காலடியில் பணிய வைத்த இயக்கம்.
இந்த இயக்கம், இலட்சிய வெறி கொண்ட இதயங்களால் பிணைக்கப்பட்ட பேரியக்கம். எத்தனையோ அரசியல் புயல்கள், சூறாவளிகள், சுனாமிகள் தாக்கிய போதும் தளராது கொள்கை மறவர்களாக அரணாக நின்று காத்திடும் இயக்கம்.
“புலி வேட்டைக்குச் செல்பவன் இடையிலே சாக்கடையில் உழன்றிடும் பன்றிகள் மீது கவனம் செலுத்தக்கூடாது” என்ற தமிழினத் தலைவரின் அறிவுரையை ஏற்று நடைபோடும் இயக்கம்.
இதன் மீது சாக்கடைச் சகதிகளை வீசி திசை திருப்ப நினைக்கும் தமிழ்நாட்டு பாஜக தற்குறி தலைவர் ‘ஊருக்கு புதுசு’ என்பதால் உளறல் அரசியலை விடுத்து, தமிழ்நாட்டு அரசியலைத் தெளிவாகப் படித்து பின்னர் இங்கு அரசியல் நடத்த முன்வரட்டும்.
சாக்கடை அரசியல் செய்ய நினைத்தால் சல்லடைக் கண்களாகத் துளைத்து எடுத்துவிடும் திமுக என்பதை உணரட்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலை தொடர்பான கேள்விக்கு பதிலளிக்காமல் சென்ற எல் முருகன்