சென்னை: தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் உடன் கேரளா போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி ராஜு சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோனை மேற்கொண்டார்.
சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளரிடையே அந்தோணி ராஜு பேசுகையில், "கரோனா தொற்றால் கேரளா - தமிழ்நாடு இடையே போக்குவரத்து நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தமிழ்நாடு - கேரளா இடையே போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் சபரிமலைக்கு தமிழ்நாட்டு பக்தர்கள் வருகைதரவுள்ளனர். இதற்குத் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தென்னிந்திய போக்குவரத்து கவுன்சில்
தென்னிந்திய போக்குவரத்து மன்றத்தைச் சேர்ந்த அமைச்சர்களைச் சந்தித்துவருகிறேன். அடுத்த ஆண்டு ஏப்ரலில் கேரளாவில் நடைபெற உள்ள தென்னிந்திய போக்குவரத்து கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு அமைச்சருக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
பாரத் சீரிஸ் குறித்து நிதித் துறை அமைச்சர், போக்குவரத்துத் துறை அமைச்சருடன் பேசியுள்ளேன். இதுவரை பாரத் சீரிஸ் தமிழ்நாடு, கேரளாவில் அனுமதிக்கப்படவில்லை . இது குறித்து கேரள, தமிழ்நாடு முதலமைச்சர்கள் சேர்ந்து முடிவு செய்வார்கள்.
கேரள எல்லையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் சோதனைச் சாவடிகளில் நிற்பதைத் தடுக்க போக்குவரத்துத் துறைச் செயலர் - ஆணையர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்படும். மேலும், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இரு மாநில முதலமைச்சர்கள் மட்டுமே முடிவெடுக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு- கேரளா இடையே போக்குவரத்து தொடங்கியது - பயணிகள் மகிழ்ச்சி