கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் ஆட்சியரகத்தில் நேற்று (டிசம்பர் 31) மாதாந்திர விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு விவசாய அமைப்புகள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தன.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட காவேரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், கரூர் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி கல்குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதற்கான உரிய ஆவணங்களை மாவட்ட ஆட்சியரிடம் காண்பித்து புகார் தெரிவித்தார்.
ஆர்டிஐ-யில் வெளிவந்த அலுவலர்களின் அத்துமீறல்கள்
இதன்பின்னர் செய்தியாளரைச் சந்தித்த முகிலன், "கரூர் மாவட்டத்திலுள்ள புகழூர் வட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட கல்குவாரிகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (RTI information) பெறப்பட்ட தகவல் அடிப்படையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன.
பரமத்தி அருகே துக்காட்சி எஸ்.பி.ஆர். பவானி ப்ளூ மெட்டல்ஸ் கல்குவாரி நிறுவனத்திற்குக் 2011 ஆகஸ்ட் 26 அன்று கல்குவாரி இயங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளிக்க மறுத்துள்ளது.
விதிகளை மீறி குவாரிக்கு அனுமதி
அதற்கான காரணம் குவாரி அமைந்துள்ள இடத்திலிருந்து 400 மீட்டர் தொலைவில் நொய்யல் பாசன விவசாயிகள் பயன்பெறும் ஆத்துப்பாளையம் அணை உள்ளது. ஆனால், கரூர் மாவட்டத்திலுள்ள கனிமவளத் துறை அலுவலர், இதற்கு அனுமதி வழங்கி குவாரி இயங்கிவருகிறது. அங்கு அணை உடைந்தாலும் பரவாயில்லை; கல்குவாரி இயங்க வேண்டும் என்று கடந்த ஆட்சிக் காலத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பு மே 6 அன்று புகளூர் வட்டம் காருடையாம் பாளையத்தில் பொன் விநாயக புளூ மெட்டல் என்ற நிறுவனத்திற்குக் கரூரில் உள்ள கனிமவளத் துறை அலுவலர், அனுமதி வழங்கியுள்ளார்.
தேசிய பசுமைத் தீர்ப்பாயம், மத்திய அரசு வழங்கியுள்ள விதிமுறைகள்படி ஐந்து ஹெக்டார் அளவுக்கு மேல் கல்குவாரி உரிமம் வழங்குவதற்கு மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் நடக்க வேண்டும் என விதிமுறை வெளியிடப்பட்டது. ஆனால், மேற்கூறிய கல்குவாரி 4.89 எனக் குறைத்து மதிப்பிட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கனிமவளத் துறை அலுவலர்களின் விதிமீறல்கள்
திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் இயங்கும் கனிமவளத் துறை அலுவலகங்களில் அனுமதி அளிக்கப்பட்ட விவரங்களைக் கேட்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்படுகிறது. மக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் கண்துடைப்புக்காக நடத்திவிட்டு புதிதாகக் கல்குவாரிகள் செயல்படுவதற்கு, கரூர் மாவட்ட கனிமவளத் துறை அலுவலர் முன் தேதியிட்டு அனுமதி அளித்துள்ளார்.
அதிமுக எடப்பாடி ஆட்சியில் மீறப்பட்ட விதிமுறை மீறல்களை, திமுக ஆட்சியிலும் தொடர அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாடு முழுவதும் கனிமவளத் துறை விதிமுறைகளை மீறி பல கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளங்களைக் கொள்ளையடிக்க அனுமதி அளித்துள்ளது.
மாவட்ட கனிமவளத் துறை அலுவலரின் மீது நடவடிக்கை தேவை
இந்த நிறுவனம் 2018ஆம் ஆண்டு அதே இடத்தில் 5.43 ஹெக்டர் அளவுக்கு அனுமதி பெற்றுள்ளது. தற்பொழுது வழங்கப்பட்டுள்ள அனுமதியுடன் சேர்த்தால் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
இந்த அனுமதியை வழங்கிய கரூர் மாவட்ட கனிமவளத் துறை அலுவலரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதாரத்துடன் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் மீறப்பட்ட விதிமுறைகள் தற்பொழுதுவரை தொடர்கிறது. இது சட்டத்தின் ஆட்சியா அல்லது கல்குவாரி உரிமையாளர்களின் ஆட்சியா? எனச் சந்தேகம் ஏற்படுகிறது.
விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஏற்கப்படாத புகார்
கரூர் மாவட்ட ஆட்சியர், விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் அளித்தபோது, நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய நிலையில், குவாரிகள் சம்பந்தமான புகார்களை வாராந்திர குறைதீர்ப்பு கூட்டத்தில் புகார் தெரிவிக்கலாம் எனக் கூறினார். அணைக்கு அருகில் கல்குவாரி செயல்படக் கூடாது என விதிமுறைகள் இருந்தும், அந்த விதிமுறை மீறப்பட்டுள்ளது.
மேலும் இவற்றை இங்குப் பேசாமல் வேறு எங்குப் பேசுவது? அரசு பொறுப்பிலுள்ள அலுவலர்கள் இது போன்ற கருத்துக்களைத் தவிர்க்கலாம்.
முதலமைச்சருக்குக் கோரிக்கை
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட இரண்டு குவாரிகளில் விதிமுறைகள் மீறி இருப்பது தெரியவந்துள்ளது. இதுபோல தமிழ்நாடு முழுவதும் முறைகேடாக வழங்கப்பட்டுள்ள கல்குவாரி உரிமங்களை முதலமைச்சர் தலையிட்டு மறுபரிசீலனை செய்து, இதனைப் போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: விளையாட்டுப் போட்டிக்கு அனுமதி மறுப்பு; குடும்ப அட்டைகளை ஒப்படைத்த கிராம மக்கள்