சென்னையில் பரபரப்புக்குப் பஞ்சமில்லாத எலக்ட்ரானிக்ஸ் பூங்கா ரிச்சி தெரு. இங்கு அனைத்து வகை எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மலிவு விலையில் கிடைக்கும். அந்த வகையில் உணவையும் மலிவு விலையில் கொடுத்து அசத்திவருகிறார் முகேஷ் குப்சிந்தானி.
கடந்த 48 ஆண்டுகளாக சென்னையில் வசித்துவரும் முகேஷ், டெல்லியை பூர்விகமாகக் கொண்டவர். மதுரையில் 10 ரூபாய்க்கு உணவளித்து பிரபலமான ராமு தாத்தா இறந்த செய்தி, முகேஷை வெகுவாகப் பாதித்துள்ளது.
இதையடுத்து, சாதாரண ஒருவரால் இது சாத்தியம் என்னும்போது, ஏன் நம்மால் முடியாது என்று முகேஷ் எண்ணியதே, சென்னையிலும் 10 ரூபாய் உணவை சாத்தியப்பட வைத்துள்ளது.
முதல் நாளில் 100 பேருக்கு சாப்பாடு வழங்கிய முகேஷ், அதையடுத்து பெருகிய ஆதரவால் 300, 400 என 10 ரூபாய் உணவு வழங்குதலை கூட்டியுள்ளார். திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சோறு, குழம்பு, பொறியல், ரசம், மோர் அடங்கிய உணவும், புதன்கிழமை சாம்பார் சோறு, சனிக்கிழமை காய்கறி உணவும் கொடுத்துவருகிறார்.
ஊரடங்கு காலத்தில் தினமும் 500 பேருக்கு சாப்பாடு வழங்கிவந்ததாகவும், பின்னர் கரோனா பரவல் அதிகமானதால் பயந்து நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்த முகேஷ், ராமு தாத்தா இறந்த செய்தி கேட்டு, இச்செயலை நாம் தொடர வேண்டும் என்ற எண்ணம் வந்ததாகவும் கூறுகிறார்.
10 ரூபாய் உணவு சுவையாகவும், தரமாகவும் உள்ளதாக மகிழ்ச்சி தெரிவிக்கும் வாடிக்கையாளர்கள், தினம் ஒருவகை உணவு என வகை வகையாக வெறும் 10 ரூபாய்க்கு கொடுப்பது மன நிறைவு அளிப்பதாகவும் கூறுகின்றனர்.
கரோனா காலத்திற்குப் பிறகு சரியான வேலையின்றி, கிடைக்கும் வேலையை செய்து சொற்ப பணம் சம்பாதித்துவரும் நிலையில், 10 ரூபாய்க்கு உணவு வழங்கிவரும் முகேஷை உழைக்கும் மக்கள் வயிறார வாழ்த்துகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் ரூ.10க்கு சோறு போட்டு ஏழைகளுக்கு பசியாற்றிய ராமு தாத்தா காலமானார்