கரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், பொது முடக்கத்தின் காரணமாகவும் கடந்த ஆண்டு மார்ச் 25ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து, 2020-21 கல்வியாண்டிற்கான வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டன. இதற்கிடையில் கரோனா தொற்று சற்று குறைந்த நிலையில், நவம்பர் மாதத்தில் பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்தது. அரசின் இந்த முடிவிற்கு பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். அதனால் அரசு தனது முடிவை ஒத்திவைத்தது.
இதைத்தொடர்ந்து ஜனவரி 6,7ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோரிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது. பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், பொதுத்தேர்வு எழுத உள்ள சுமார் 19 லட்சம் மாணவர்களுக்கு இன்று(ஜனவரி 19) முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
பள்ளிக்கு வரும் மாணவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் விதமாக 3.84 கோடி வைட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரைகள் முதல் நாளான இன்று(ஜனவரி 19) மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மாணவர்களை பெற்றோர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு அழைத்து வந்து விட்டுச் சென்றனர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 6 ஆயிரத்து 194 அரசுப்பள்ளிகள், ஆயிரத்து 758 அரசு உதவிபெறும் பள்ளிகள், 4 ஆயிரத்து 726 மெட்ரிக்குலேசன் பள்ளிகள், ஆயிரத்து 293 சிபிஎஸ்இ பள்ளிகள் என 13 ஆயிரத்து 971 பள்ளிகளில் 19 லட்சத்து 20ஆயிரத்து 13 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் 85 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்துள்ளதாக பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.