சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு வார்டிலும், சுகாதார ஆய்வாளர்கள் தலைமையிலான குழுவினர் அங்காடிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தும், உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தும் வருகின்றனர்.
அதன்படி, கடந்த 14ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை சோதனை மேற்கொண்டதில், 3 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர்களுக்கு 12 லட்சத்து 44 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டை தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், நாள்தோறும் சேகரமாகும் குப்பைகளில் பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்ந்து வருகின்றன. அவ்வாறு சேகரமாகும் பிளாஸ்டிக் கழிவுகள் தனியாக பிரித்தெடுக்கப்பட்டு, பண்டல்களாக மாற்றும் இயந்திரங்களை (Baling machine)பயன்படுத்தி பண்டல்களாக கட்டப்பட்டு, மறுசுழற்சிக்கு செய்யப்படுகிறது.
அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் குப்பைகளிலிருந்து பிரித்து எடுக்கப்படும், சுமார் 40 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் பொருள்கள் பண்டல்களாக கட்டப்பட்டு, மறுசுழற்சியாளர்கள் மற்றும் சிமெண்ட் ஆலைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: மாநகராட்சி அலுவலகத்துக்கு 'கலைவாணர்' பெயரே தொடரும் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு