சென்னை: சாலிகிராமம் பெரியார் தெருவில் தனியாக வசித்து வருபவர் அனுராஜ் (30). இவர் தனியார் ஆன்லைன் உணவு நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் டெலிவரி பாயாக பணிப்புரிந்து வரக்கூடியவர் எம்எம்டிஏ காலனி பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் சிவா (26). சிவா 19 வயது பெண்ணை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவா நேற்றிரவு (டிச.29) தனது காதலியுடன் அனுராஜ் வீட்டிற்குச் சென்றார். அப்போது சிறிது நேரத்தில் அனுராஜ் வீட்டின் கதவை சில நபர்கள் தட்டியுள்ளனர். உடனே திறந்தபோது வீட்டிற்குள் புகுந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் தங்களை காவல் துறை எனக்கூறி, இந்த பெண் யார்? உங்கள் மீது சந்தேகம் இருப்பதாக கூறி மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து அந்த கும்பல் மூவரிடமிருந்து ஐந்து செல்ஃபோன்கள், ரூ.30,000 பணம், பெண் கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் நகை ஆகியவற்றை பறித்துவிட்டு, காவல் நிலையத்திற்கு வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறி கதவை மூடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதனால் பயந்துபோன சிவா உடனடியாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். எந்தவிதமான காவல் துறையினரும் அங்கு வரவில்லை என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, போலி காவல் துறை கும்பல் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் சிவா புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சிவாவை பின்தொடர்ந்து ஒரு கும்பல் அனுராஜின் வீட்டிற்கு வருவது போல் காட்சிகள் பதிவாகியிருந்தது. பின்னர், அந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: Headmaster Suspended: மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்