சென்னையிலிருந்து துபாய் செல்லும் எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் நேற்று (செப். 9) புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் பாதுகாப்பு அலுவலர்கள் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையைச் சோ்ந்த 35 வயதுடைய பயணி ஒருவர் சிறப்பு நுழைவு இசைவில் இந்த விமானத்தில் துபாய் செல்ல வந்தார். அவர் ஒரு அட்டைப்பெட்டி வைத்திருந்தார். அதில் என்ன இருக்கிறது என்று பாதுகாப்பு அலுவலர்கள் கேட்டனர்.
அதனுள் வடகம், அப்பளம் போன்ற உணவுப் பொருள்கள் இருப்பதாக பயணி கூறினார். ஆனால், பாதுகாப்பு அலுவலர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
வெளிநாட்டுப் பணங்கள் கடத்தல்
இதையடுத்து அந்த அட்டைப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது, அட்டைப்பெட்டியின் அடியில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணங்களான சவுதி ரியால், யூரோ கரன்சிகள் இருந்தது தெரியவந்தது.
அதன் மொத்த மதிப்பு 11 லட்சத்து 48 ஆயிரம் ரூபாயாகும். இதையடுத்து பயணியின் பயணத்தைப் பாதுகாப்பு அலுவலர்கள் ரத்துசெய்தனர்.
பின்னர், பயணியைக் கைதுசெய்த அலுவலர்கள், அவரிடமிருந்த பணத்தைப் பறிமுதல்செய்தனர். இதையடுத்து மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களிடம் அவரை ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: நட்சத்திர ஆமைகள் கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம்: இதுதான் முதல்முறை!