சென்னை: கொளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். வாய் பேச முடியாத இவர், காது கேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாத சங்கத்தின் விளையாட்டுப் பிரிவில் செயலாளராக இருந்துவருகிறார். இந்நிலையில், சந்தோஷ் குமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்தார்.
இது குறித்து சந்தோஷ்குமாரின் வழக்கறிஞர் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "வாய் பேச முடியாத, காது கேளாதவரான சந்தோஷ்குமார் தமிழ்நாடு காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் சங்க விளையாட்டுப் பிரிவில் செயலாளராக இருப்பதை அறிந்த ரோகன் என்பவர் 2018ஆம் ஆண்டு நெருங்கிப் பழகிவந்தார்.
கோடி கணக்கில்... ஏமாற்றியவர்கள் மீது புகார்
வாய் பேச முடியாதவரான ரோகன் வசதி படைத்தவராக இருப்பதுபோல் சந்தோஷ்குமாரிடம் பாவனை காட்டிவந்தார். மேலும், துபாயில் ஷேர் மார்க்கெட்டிங் செய்ததினால் பணக்காரராக மாறியதாக சந்தோஷ்குமாரிடம் காணொலி அழைப்பு மூலம் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
இதனையடுத்து ரோகன், சரண், அவரது மனைவியான சாரதாவை அறிமுகம் செய்துவைத்து, ஷேர் மார்க்கெட்டில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 45 நாள்களில் இரு மடங்கு தொகை வழங்கப்படும் எனக் கூறியதையடுத்து சந்தோஷ் ஒரு லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.
45 நாள்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக சந்தோஷிற்கு வழங்கியதால் தமிழ்நாட்டிலுள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத சங்கத்திலிருந்த பல பேரை ஷேர் மார்க்கெட்டிங்கில் பணம் செலுத்தும்படி வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து, அவர்கள் சந்தோஷை நம்பி இரண்டு கோடியே ஐந்து லட்சம் ரூபாய் வரை பணம் செலுத்தியுள்ளனர்.
ஆனால், 45 நாள்கள் கழித்து அந்தக் கும்பல் பணம் தராததால், இது குறித்து கேட்டபோது பணம் தருவதாக காலம் தாழ்த்திவந்துள்ளனர். இதனால், தன்னை ஏமாற்றியதாகக் கூறி சரண், அவரது மனைவி சாரதா, ரோகன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்" என வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பண மோசடி விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்மன்