சென்னை: வங்க கடலில் உருவாகிய அசானி புயல் காரணமாக, தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்தொடர்ச்சியாக சென்னை புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் மிதமான மழை பெய்தது.
குறிப்பாக, திருவல்லிகேனியில், அண்ணாசாலை, இராயபுரம், கே.கே.நகர், எழும்பூர், பாலவாக்கம், நுங்கம்பாக்கம், பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், மந்தைவெளி, வடபழனி, புரசைவாக்கம், கோயம்பேடு மற்றும் கிண்டி பகுதிகளில் மிதமான மழை விட்டுவிட்டு பெய்தது.
வடமேற்கு திசையில் நகரும் அசானி புயல், இன்று ( மே 10) வட ஆந்திரா - ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும். அதன்பிறகு, வடக்கு-வடகிழக்கு திசையில் ஒரிசா கடற்கரை ஒட்டிய வட மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழக்கக்கூடும்.
இதனால், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இன்று காற்று மணிக்கு 85 முதல் 95 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 105 கி.மீ.வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு ஆந்திர கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ.வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதன்காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆந்திராவிலிருத்து 550 கி.மீ. தொலைவில் 'அசானி' புயல் மையம்