சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 7) இரண்டாவது நாளாக துறை வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
விவாதங்களின் கேள்வி நேரத்தின்போது, சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கலைஞர் கருணாநிதி நகரில் உள்ள கிளை நூலகத்தின் கட்டடம் சேதம் அடைந்து இருப்பதாகவும், கட்டடத்தின் சுற்றுச்சுவற்றில் பாம்புகள் தொல்லை இருப்பதாக வாசகர்கள் புகார் கூறியிருப்பதால், அரசு அந்த நூலகத்தை நவீன வசதிகளோடு மாற்றி குளிர் சாதன வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென விருகம்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர் பிரபாகர் ராஜா கோரிக்கை வைத்தார்.
மழையில் நனையும் புத்தகங்கள்: இதற்குப்பதில் அளித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'தமிழ்நாடு அரசு அலுவலர்களை வைத்து ஆய்வு செய்து, இந்த ஆண்டிலேயே அந்த நூலகம் குளிர்சாதன வசதியோடு மாற்றப்படுமென கூறினார். இதனைத் தொடர்ந்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாகபட்டினம் சட்டப்பேரவை உறுப்பினர் ஆளுர் ஷாநவாஸ், நாகப்பட்டினத்தில் உள்ள மைய நூலகத்தின் சேதம் அடைந்த கட்டடத்தை சீர் செய்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ரூ.6 கோடி ஒதுக்கீடு: அதேபோல, நாகூரில் புத்தகங்கள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருவதை தவிர்க்க நூலகத்தில் உள்ள கட்டடத்தையும் சரி செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், 'இதையெல்லாம் சரி செய்ய ஒட்டுமொத்தமாக நிதிநிலை அறிக்கையில் ரூ.6 கோடி நூலகத்திற்காக ஒதுக்கியிருப்பதாக' கூறினார்.
இதையும் படிங்க: பழைய நூலகப் புதுப்பிப்பு பணி: பொது நூலகத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு