திமுக இளைஞரணிச் செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் வெற்றி பெற்ற நாளிலிருந்தே தனது தொகுதியில் பம்பரமாய் சுழன்று பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்துவருகிறார்.
குப்பை கொட்டப்படும் இடம் முதல் பொது கழிவறை வரை தொகுதியின் சந்து, பொந்துக்கெல்லாம் சென்று ஆய்வு மேற்கொண்டு வரும் அவர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றியும் வருகிறார். மேலும் கரோனா நிவாரணப் பொருட்கள் வழங்குவது, கரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்டப் பணிகளையும் செய்துவருகிறார்.
அம்மா உணவகத்தில் உதயநிதி அதிரடி:
நாள்தோறும் தொகுதியில் தான் மேற்கொண்டு வரும் பணிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தும் வருகிறார். இந்த நிலையில் திருவல்லிக்கேணி பகுதி, காட்டுக்கோவில் தெரு அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சமைக்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து உணவின் தரத்தை சோதனை செய்தார்.
தொடர்ந்து உணவகத்தை சுகாதாரமாக பராமரிக்க அறிவுறுத்தினார். மேலும் சமையலுக்கு தேவையான பொருள்களின் இருப்பு, தினசரி வருவாய் குறித்தும் கேட்டறிந்தார். அம்மா உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டதை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.இதையடுத்து அப்பகுதி மக்களுக்குக் கரோனா நிவாரணமாக மளிகைப் பொருள்களையும் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
இடுகாட்டில் ஆய்வு:
கடந்த சில நாள்களுக்கு முன்பு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணம்பேட்டை இடுகாட்டில் அதிகளவில் உடல்கள் எரியூட்டப்பட்டு வருவதால் கரும்புகை வெளியேறி மக்களுக்கு சுவாச கோளாறு, ஏற்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அங்கும் ஆய்வு செய்து நிரந்தர தீர்வு காண அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.