சென்னை: புளியந்தோப்பில் உள்ள கே.பி பூங்காவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் சட்டப்பேரவையில் குற்றம் சாட்டியுள்ளார்.
எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை சட்டப்பேரவையில் முன்னதாகக் கொண்டு வந்தார். அதில் ”சென்னை, புளியந்தோப்பில் உள்ள கே.பி பூங்காவில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு தரமற்ற முறையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தொட்டாலே உதிரும் சிமெண்டை கொண்டு இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
அதிமுக அரசு ஆட்சியில் இருந்தபோது கட்டிய கட்டடங்களை ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும். இந்தக் கட்டடம் அமைக்க ஒப்புதல் அளித்த ஓ.பன்னீர்செல்வம் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், "கே.பி பூங்காவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மிகவும் மோசமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் கடந்த ஆட்சியில் கட்டப்பட்ட கட்டடங்களை ஆய்வுக்குள் கொண்டு வர வேண்டும் என எம்எல்ஏ பரந்தாமன் கோரியுள்ளார்.
2016ஆம் ஆண்டு அதிமுக அரசின் ஒப்புதல் பெறப்பட்டு 112.60 கோடி ரூபாய் செலவில் 850 குடியிருப்புகள் கட்டப்பட்டு 2020ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை கரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தன.
அடையாளம் தெரியாத நபர்களால் குடிநீர், கழிவுநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளது கவனத்திற்கு வந்ததை அடுத்து பழுது நீக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
கடந்த வாரம் பெய்த மழையால் கட்டடம் சேதமடைந்துள்ளது. அதன் தரம், உறுதித் தன்மையை அறிய நேற்று (ஆக.18) நானும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, துறை செயலாளர் ஆகியோரும் ஆய்வு செய்தோம்.
இந்தியத் தொழில் நுட்பக் கழகம் அறிக்கை அளித்ததும், தவறு கண்டறியப்பட்டால் ஒப்பந்ததாரர், சம்மந்தபட்ட அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ’கோடநாடு விவகாரத்தில் மறு விசாரணைக்கு உத்தரவிடுக’ - கே.பாலகிருஷ்ணன்