தேமுதிகவிலிருந்து விலகி 3000க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையும் விழா, அண்ணா அறிவாலயத்தில் இன்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி திமுகவில் இணைந்த தேமுதிக வட சென்னை மாவட்டச் செயலாளர் மதிவாணனின் ஆதரவாளர்கள் இன்று திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், ”இன்னும் நான்கே மாதத்தில் நான் எதிர்பார்ப்பதை விட, நீங்கள் எதிர்பார்ப்பதை விட ஒட்டு மொத்த தமிழகமுமே திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மக்களை ஏமாற்ற வேண்டும் என அரசு பணத்தில் பொய்யான விளம்பரங்களை அதிமுக செய்து வருகிறது. நம் வரிப்பணம் அது. அவர்கள் அப்பன் வீட்டு பணமல்ல. என்ன செய்தாலும் எதிர்க்கட்சியாக கூட அதிமுகவால் வர முடியாது.
சில நாட்களுக்கு முன்பு நான் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்திருந்தேன். ஆனால் தற்போது கிராம சபை கூட்டங்கள் போன்றவையில் கிடைக்கும் மக்கள் ஆதரவை பார்த்தால் 234 தொகுதிகளிலும் திமுகவே வெற்றி பெறும் நிலை உள்ளது” எனக் கூறினார்.
இக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், கலாநிதி வீராசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: துக்ளக் குருமூர்த்தியை சிறையில் அடைக்க வேண்டும் - இந்திய தேசிய லீக்