கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாமக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி மற்றும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஏராளமானோர் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனர். அவர்களை சென்னையிலிருந்து காணொலி வாயிலாக வரவேற்ற மு.க.ஸ்டாலின் பின்னர் அவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ”திமுக ஆட்சியில்தான் வன்னியர் சமூகம் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் 20% இடஒதுக்கீடும் வழங்கப்பட்டது. இடஒதுக்கீடு கேட்டுப் போராடி உயிர் நீத்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவியும், உதவித்தொகையும் அளிக்கப்பட்டது.
ஆனால், பாமக நிறுவனர் ராமதாஸ், சுய நலத்திற்காக வன்னியர் சமுதாயத்திற்கு திமுக செய்த சாதனைகளை மறைத்து பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார். அதனை எதிர்த்துதான் இன்று பாமகவிலிருந்து விலகி நீங்கள் எல்லாம் திமுகவில் இணைந்திருக்கிறீர்கள். ஆகவே, ராமதாஸ் விமர்சிக்க விமர்சிக்க, அக்கட்சியில் உள்ள பாட்டாளிகள், திமுகவை நோக்கி இன்னும் அதிகமாக வரப்போகிறார்கள்.
தமிழ்நாட்டில் ஆட்சி நடக்கவில்லை. தினம் ஒரு தகவல் போல், தினம் ஒரு பொய் சொல்வது முதலமைச்சர் பழனிசாமிக்கு வாடிக்கையாகி விட்டது. காரணம், அவரிடம் சாதனைகளைச் சொல்ல சரக்கு இல்லை. நேற்றுக்கூட ஜெயலலிதா நினைவிடம் திறப்பதை பினாமிகள் மூலம் வழக்குப் போட்டு ஸ்டாலின் தடுத்தார் என ஒரு பொய்யைக் கூறியிருக்கிறார். பினாமிகளை வைத்து ஊழல் செய்வது, பினாமிகள் பெயரில் டெண்டர் விடுவது பழனிசாமியின் வேலை. ஆனால் திமுக என்றைக்குமே எதையும் நேரில் எதிர்க்கும் இயக்கம்” எனப் பேசினார்.
இதையும் படிங்க: அனைத்து சமுதாய மக்களுக்கான தலைவரை உருவாக்குவேன் - சூளுரைத்த தமிழ்நாடு முன்னாள் த.செ.!