முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 29 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரை விடுதலை செய்யலாம் என தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் இது தொடர்பாக ஆளுநர் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் இன்று (நவ.24) நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
பின்னர் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தினோம்.
சட்ட ரீதியாகவும், மனிதாபிமான அடிப்படையிலும் இதில் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம். ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார். அதிமுக ஆட்சிக்காலத்தில் தருமபுரியில் மூன்று மாணவிகளை தீ வைத்து எரித்துக்கொன்றவர்களை தமிழ்நாடு அரசு விடுதலை செய்துள்ளது. அதை கோடிட்டு காட்டி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.
பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தன்னந்தனியாக போராடி வருகிறார். ஆளுநர் உடனடியாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினோம். அவரது பதில் திருப்தியாக இருந்தது” என்றார்.
இந்தச் சந்திப்பின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, துணைப் பொதுச்செயலாளர் க.பொன்முடி, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலைத் தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : உன் மகன், உன்னிடம் வருவான் என்றார் ஜெ., - இன்னும் அது நடக்கவில்லை!